யதுவம்சத்தில் புகழ் பெற்ற பல அரசர்கள் தோன்றினார்கள். அவர்களில் அவனுக்கு ஒரு மகன். அவன் பெயர் ஜிக்னன். மிகுந்த திறமைசாலி.
ஜிக்னனுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். ஒருவன் பெயர் பிரசேனன். இன்னொருவன் சத்ராஜித். இருவரும் தங்கள் தந்தையைப் போலவே மாபெரும் வீரர்களாகத் திகழ்ந்தனர்.
சத்ராஜித் தலைச்சிறந்த தேரோட்டியாக விளங்கினான். ஒரு சமயம் அவன் இரவு நேரத்தில், தனது ரதத்தின் மீதேறி, அரண்மனையை விட்டுக் கிளம்பிச் சென்றான்.
அவனது ரதம் கடற்கரையை அடைந்தபோது, இரவின் கடைசி ஜாமம் ஆகிவிட்டது.
எனவே அவன், கடலிலிருந்து எழுந்து வரும் சூரியதேவனைத் துதிக்க ஆரம்பித்தான். அதனால் மகிழ்ச்சியடைந்த சூரியதேவன் சத்ராஜித்துக்குக் காட்சி அளிக்க விரும்பி, அவன் முன் தோன்றினான்.
சூரியனின் பளீர் ஒளியைச் சந்திக்க முடியாமல், சத்ராஜித்தின் கண்கள் மூடிக்கொண்டன. அவனால் சூரியனைக் கண்டு தரிசிக்க முடியவில்லை.
எனவே, அவன், "சூரியதேவா! தங்களிடமிருந்து புறப்பட்டு வரும் ஒளிக்கீற்றுகள், என் கண்களைக் கூசச் செய்கின்றன. என்னால், தங்களைத் தரிசிக்க முடியவில்லை. தயவு செய்து, தினசரி தாங்கள் இந்த உலகிற்கு வந்து பிரகாசிப்பதைப் போன்று, அந்த உருவத்தில் வந்து எனக்குக் காட்சி கொடுத்தருள வேண்டுகிறேன்....’’ என்று பிரார்த்தனை செய்தான்.
சத்ராஜித்தின் வேண்டுகோளைச் சூரியன் ஏற்றுக் கொண்டான். "ஓ....அப்படியா.....சரி........’’ என்று கூறிய சூரியதேவன், தனது கழுத்திலிருந்த மணிரத்தினத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினான்.
உடனே, சத்ராஜித்துக்கு சூரியதேவன் மிகுந்த தெளிவுடன் தோன்றினான்.
சூரியனின் அந்த உருவத்தைக் கண்ணாரக் கண்ட சத்ராஜித் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். சூரியனை மனதாரப் போற்றிப் புகழ்ந்தான்.
அதன் பிறகு, சூரியன் அங்கிருந்து செல்லும் நேரம் வந்தது.
அப்போது சத்ராஜித், சூரியனைக் கைகூப்பி வணங்கிக் கூறினான்:
"சூரிய பகவானே! தாங்கள் உங்களுடைய மணி ரத்தினத்தைக் கொண்டு மூன்று உலகங்களை ஒளி பெறச் செய்து கொண்டிருக்கிறீர்கள். அது போன்ற ஒரு மணி என்னிடம் இருக்கக் கூடாதா என்று நான் ஏங்குகிறேன். தயவு செய்து, தாங்கள் இந்த மணியை எனக்குத் தந்து அருள் புரிகிறீர்களா?’’ என்று வேண்டினான்.
பக்தன் விரும்பியதை சூரிய பகவான், "இல்லை” என்று மறுக்க முடியுமா? சூரியதேவன் சத்ராஜித்தின் வேண்டுகோளை ஏற்று, மனமுவந்து தன்னுடைய மணியை அரசனிடம் அளித்தான்.
மணியைப் பெற்ற சத்ராஜித், சூரிய பகவானைப் போலவே அதைத் தன் கழுத்தில் அணிந்துகொண்டு துவாரகா புரிக்குத் திரும்பினான்.
சூரியன் கொடுத்த அந்த மணி, சத்ராஜித்திடம் மிகுந்த தேஜசை ஏற்படுத்தியது. அதனால் அவன் சூரியனைப் போல் ஜொலிக்க தொடங்கியிருந்தான். வழி முழுவதும் இருந்த மக்கள் அவனைக் கண்டு அதிசயித்து நின்றார்கள். "அதோ சூரியனே போகிறான் பார்.....!" என்றே பேசிக் கொண்டார்கள்.
அந்த மணி சத்ராஜித்திடம் மிகுந்த சுக சௌபாக்கியங்களை ஏற்படுத்தியது. அதோடு அவனுக்கு அது தினசரி எட்டு பொற்காசுகளையும் வழங்கியது. அது வந்த பிறகு, சத்ராஜித்தினுடைய நாடும் வளம் பெற்றுயர்ந்தது.
சூரிய பகவானின் பிரசாதமாகிய அந்த மணிரத்தினத்திற்கு ‘சியமந்தக மணி’ என்று பெயர்.