ஒரு காட்டில் ஒரு சாது இருந்தார். அவருக்கு சீடர்கள் பலர் இருந்தனர்.
ஒரு நாள் சாது தனது சீடர்களிடம், "உலகில் உள்ளவை எல்லாம் கடவுளுடைய வடிவங்கள். இதை அறிந்து நீங்கள் அனைவரையும் வணங்குங்கள்’’ என்று உபதேசித்தார்.
ஒரு நாள் ஒரு சீடன் ஹோமம் வளர்ப்பதற்கு வேண்டிய விறகுகளை சேகரிக்கக் காட்டிற்குச் சென்றான்.
அப்போது தீடீரென்று, "யார் எங்கிருந்தாலும் ஓடிவிடுங்கள்! மதம் பிடித்த ஒரு யானை வருகிறது!" என்று பலமான ஒரு குரல் கேட்டது. அதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் எல்லோரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்கள்.
ஆனால், அந்தச் சாதுவின் சீடன் மட்டும் நகரவில்லை. "நான் எதற்காக ஓட வேண்டும்? நானும் கடவுள் இந்த யானையும் கடவுள்’’ என்று சொல்லிக் கொண்டே அசையாமல் நின்று விட்டான். விரைவில் யானை அவனை நெருங்கிவிட்டது.
அந்த நிலையிலும் சீடன் இருந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். அவன் கைகளைக் கூப்பிக்கொண்டு யானையை நோக்கி நாராயண ஸ்துதியைப் பாட ஆரம்பித்தான்.
அவனைப் பார்த்து யானையின் மேலிருந்த மாவுத்தன், "ஓடிப்போ! ஓடிப்போ!" என்று கத்தினான். அப்படியும் அந்தச் சீடன் அங்கிருந்து நகரவே இல்லை.
சீடனை மதயானை நெருங்கியது. சீடனை அது தன் துதிக்கையால் தூக்கி எடுத்து, ஒரு பக்கமாக ஓங்கி வீசிவிட்டுப் போய்விட்டது.
அது காரணமாகப் பலமான காயங்களுடன் சீடன் மூர்ச்சித்து விழுந்தான்.
ஆசிரமவாசிகள் நடந்ததைக் கேள்விப்பட்டார்கள்.
அவர்கள் சீடன் இருக்கும் இடத்திற்கு வந்து அவனை ஆசிரமத்திற்குத் தூக்கிக் கொண்டு போனார்கள்.
சீடனுக்கு மெல்ல மெல்ல உணர்வு திரும்பியது. அப்போது மற்ற சீடர்களில் ஒருவர், "யானை வந்ததுதான் உனக்குத் தெரியுமே, நீ ஏன் அங்கிருந்து ஓடவில்லை?’’ என்று வினவினார்.
அதற்குச் சுயநினைவு திரும்பிய சீடன் பதில் சொன்னான்.
‘‘உலகில் உள்ளவை எல்லாம் கடவுளுடைய வடிவங்கள். அவரே மனிதன், விலங்கு முதலிய எல்லா வடிவங்களிலும் இருந்து கொண்டிருக்கிறார்’ என்று நமது குருதேவர் உபதேசித்திருக்கிறார் அல்லவா? ஆகவேதான் யானையைப் பார்த்த போது ஏன் ‘யானை வடிவத்தில் இருக்கும் கடவுள் தானே வருகிறார்’’ என்று நினைத்தேன்.
ஆதலால் அங்கிருந்து ஓடாமல் இருந்தேன்.
சீடனின் பதிலைக் கேட்ட குருநாதர், "குழந்தாய்! அதெல்லாம் சரிதான். நீயும் கடவுள்தான். அந்த யானையும் கடவுள்தான். ஆனால், யானை மேலிருந்த பாகனாகிய கடவுள், உன்னை எச்சரித்த போது அவனது வார்த்தையில் உனக்கு ஏன் நம்பிக்கை ஏற்படவில்லை? நீ யானைப்பாகன் வடிவத்திலிருந்த கடவுளுடைய வார்த்தையையும் மதித்திருக்க வேண்டும். அதன்படி கேட்டு நீ நடந்திருக்க வேண்டும் அல்லவா?’’ என்று கேட்டார்.
தூய்மை உள்ளவர்கள் – தூய்மை இல்லாதவர்கள், நேர்மை உள்ளவர்கள் – நேர்மை இல்லாதவர்கள் ஆகிய அனைவருடைய இதயத்திலும் கடவுள் வாழ்கிறார். இதுதான் உண்மை. அதில் ஒன்றும் சந்தேகத்திற்கே இடமில்லை.
ஆனால் பக்தி இல்லாதவர்கள், தூய்மை இல்லாதவர்கள், கொடியவர்கள் ஆகியவர்களுடைய தொடர்பையே ஒருவன் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களில் சிலரிடம் அவன் ஒரு சில சொற்களை மட்டுமே பேசி நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் அவ்வளவு தூரத்திற்குக் கூடப் போகக் கூடாது. அத்தகையவர்களிடம் இருந்து அவன் விலகியே இருக்க வேண்டும்.