செல்வன் ஒருவன் தன் வீட்டு விருந்திற்கு வருமாறு இறைவன் கண்ணனை வருந்தி அழைத்தான்.
அந்த அழைப்பை ஏற்றுக் கண்ணனும் அவன் வீட்டிற்கு வந்தார்.
விருந்திற்கான ஏற்பாடுகள் மிகவும் தடபுடலாக இருந்தன.
கண்ணனின் முன் பல வகையான உணவுப் பொருள்கள் உள்ள ஏராளமான பாத்திரங்கள் வைக்கப்பட்டன.
‘என்னென்ன உணவுப் பொருள்கள் இருக்கின்றன’ என்று கண்ணன் ஒவ்வொரு பாத்திரமாகப் பார்த்துக் கொண்டே வந்தார்.
அவர் அங்கிருந்த பாத்திரங்களில் ஒரு கிண்ணம் மட்டும் ஓரம் நசுங்கிப் பல விரிசல்களுடன் இருந்ததைக் கண்டார்.
அந்தக் கிண்ணத்தை எடுத்த அவர் அதிலிருந்த உணவைச் சாப்பிட ஆரம்பித்தார்.
இதைப் பார்த்த செல்வன் கண்ணனின் திருவடிகளில் விழுந்து, "இறைவா! கிண்ணத்தைத் தேர்ந்தெடுத்ததைப் போலத்தானே நீங்கள் மனிதர்களையும் தேர்ந்தெடுப்பீர்கள்? வலியவர்களை விட்டுவிட்டு மெலியவர்களுக்கு ஆதரவு தருவீர்கள்? எளியவர்களுக்கு எப்போதும் உங்கள் அருள் உள்ளம் இரங்கும்" என்ற கூறி மனம் உருகினான்.