பரம முட்டாளும், ஏழையுமான ஒருவன் ஒரு நாள் காளிதாசரிடம் வந்து, ‘‘ஐயா, நான் மிகவும் ஏழை. எப்படியாவது போஜராஜனிடமிருந்து பொருளுதவி கிடைக்கத் தாங்கள் உதவ வேண்டும்’’ என வேண்டினான்.
காளிதாசர் மனமிரங்கி, ‘‘நாளை காலையில் அரசவைக்கு, நான் சென்ற பிறகு நீங்கள் வாருங்கள். ஆனால், நீங்கள் அங்கு எதுவுமே பேசக் கூடாது’’ என்றார்.
அவனும் சம்மதித்தான்.
காளிதாசர் சென்றதும், அவரிடம் பொறாமை கொண்ட சிலர், அந்த முட்டாளை அழைத்து,‘‘நீ மன்னனைப் பார்க்க வெறும் கையுடன் செல்லாதே, இரண்டு கொள்ளிக்கட்டைகளை எடுத்துச் செல். அவையில் மன்னன் முன்பு, அந்தக் கொள்ளிக்கட்டைகளை வைத்துவிட்டு நில்’’ என்றனர்.
அந்த முட்டாள் அதற்கும் சம்மதித்தான்!
மறுநாள் அரசவைக்கு, காளிதாசர் சற்றுத் தாமதமாகச் சென்றார்.
தாமதத்திற்கான காரணத்தை மன்னர் கேட்டார். காளிதாசர்,
‘‘அரசே, இன்று என் குரு வந்திருந்தார். அவருக்குப் பணிவிடைகளைச் செய்துவிட்டு வரத் தாமதமாயிற்று. என் குருவும் இன்னும் சற்று நேரத்தில் இங்கு வருவார். அவர் இன்று மௌன விரதம். எதுவுமே பேசமாட்டார்’’ என்றார்.
சிறிது நேரத்தில் அந்த முட்டாள் இரண்டு கைகளிலும் கொள்ளிக்கட்டைகளுடன் சபைக்குள் நுழைந்து அரசன் முன்பு அவற்றை வைத்துவிட்டுப் பேசாது நின்றான்.
அவையில் அனைவரும் அதனைப் பார்த்து திகைத்தனர்!
அரசன் காளிதாசரைப் பார்த்தார்.
கவிஞருக்கு இது விரோதிகளின் சூழ்ச்சி என்பது புரிந்தது. உடனே சமயோசிதமாகத் ‘தனது குருவின்’ செயலுக்கு விளக்கமளித்து ஒரு சுலோகத்தைக் கூறினார்.
“தக்தம் காண்டவமர்ஜுநேந து வ்ருதா திவ்யைர் த்ருமைர் பூஷிதம் தக்தா வாயுஸுதேந ஹேமரசிதா லங்கா வ்ருதா ஸ்வர்ணபூ: |
தக்தஸ் ஸர்வஸுகாஸ்பதஸ் ஸ மததோ ஹா ஹா வ்ருதா சம்புநா, தாரித்ர்யம் ஜநதாபகம் புவி புந: கேநாபி நோ த ஹ்யதே ||”
‘அழகிய மரங்கள் நிறைந்த காண்டவ வனத்தை அர்ஜுனன் எரித்தான். பொன்மயமான இலங்கையை அனுமன் எரித்தான். இன்பங்களைத் தரும் மன்மதனை பரமசிவன் எரித்தார். இவை அத்தனையும் வீண். இவற்றால் யாருக்கு என்ன பயன்? மக்களை அல்லும் பகலும் வாட்டும் வறுமையை இதுவரை யாரும் எரிக்கவில்லையே?’ என்பதுதான் அந்த சுலோகத்தின் பொருள்.
‘இதனைத் தங்களால்தான் அறவே எரித்துச் சாம்பலாக்க முடியும் என்பதைக் காட்டத்தான் எனது குருநாதர், கொள்ளிக்கட்டைகளைக் கொண்டு வந்திருக்கிறார்’ என்றார் கவி காளிதாசன்!
போஜராஜனும் அந்த ஏழைக்குத் தேவையான பொருளுதவியைச் செய்து அனுப்பினான்.