ஓர் ஏழை விறகுவெட்டி, ஒரு சமயம் சோழ மன்னனின் முன்னால், அந்த மன்னனைப் போற்றுவதாக நினைத்துப் பாடிய, அர்த்தமற்ற கவிதைக்கு கவிச்சக்ரவர்த்தி கம்பனும் அற்புதமாக விளக்கம் சொன்னார்.
மன்னனைப் புகழ்ந்து பாடி, பரிசு பெற நினைத்த அந்த விறகுவெட்டி, ஒரு நாள் சோழ மன்னனின் அவையில் கீழ்க்கண்டப் பாடலைப் பாடினான்.
‘மண்ணுண்ணி மாப்பிள்ளையே காவிறையே, கூவிறையே, உங்களப்பன்
கோவிற்பெருச்சாளி, கன்னா, பின்னா, மன்னா, தென்னா, சோழரங்கப் பெருமானே.’
அந்த விறகுவெட்டி, இப்படி உளறியதும், அவையில் இருந்த அனைவரும் அவனைப் பார்த்து எள்ளி நகையாடினார்கள்.
ஆனால் கம்பர் அவன் மீது இரக்கம் கொண்டார்.
உடனே அவர் மன்னனிடம்,‘‘இந்தப் புலவன் பாடிய பாட்டில் இலக்கணப் பிழை இருந்தாலும், இப்பாட்டின் பொருள் வருமாறு:
‘‘பூமியை உண்ட திருமாலை ஒத்தவனே, செல்வத்தாலும், அழகாலும் இலக்குமியின் மகனாகிய மன்மதனே, கற்பகத்தின் அரசனான இந்திரனே, உங்கள் தந்தை விற்போரில் சிங்கம் போன்றவர். வரையாது கொடுத்தலால் (கன்னன்) கர்ணணுக்குப் பின் தோன்றிய தர்மன். அழிவின்றி வாழ்வதால் மன்னன். தமிழ் வளர்த்த பாண்டியன். சோழ தேசப் பெருமானே என்று சுவைபடப் பொருள் கூறினார்!
இதனைக் கேட்ட அனைவரும் கம்பரைப் புகழ்ந்தனர்.