ஒரு பணக்காரரின் பிள்ளை காணாமல் போய்விட்டான்.
அவர் இறக்கும் முன் 'தனக்குச் சொந்தமான எல்லாமும் தன் அடிமைக்கே. அவற்றில் மகனுக்கு எது விருப்பமோ அதை அவன் பெறலாம்' என்று உயிலெழுதி வைத்துவிட்டு இறந்து போனார்.
பணக்காரரின் சொத்து தனக்குக் கிடைத்தது குறித்து அவரின் அடிமை மகிழ்ந்தான்.
பணக்காரனின் மகனைத் தேடிக் கண்டுபிடித்து, ''சொத்து அத்தனையையும் உன் அப்பா எனக்கு எழுதி வைத்துவிட்டார். அதிலிருந்து உங்களுக்கு வேண்டிய ஏதாவது ஒன்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்'' என்றான்.
நமக்கு ஒன்றும் வைக்காமல் அனைத்தையும் அடிமைக்குக் கொடுத்தாரே என்ற கவலையை ஒரு குருவிடம் சொன்னான் மகன்.
யோசித்துப் பார்த்த அவர், ''அத்தனைச் சொத்தும் உன்னைத் தேடிவரும்படி உன் தகப்பனார் வழி செய்திருப்பது தெரியாமல் வருத்தப்படுகிறாயே'' என்றார்.
''எப்படி எல்லாம் எனக்கே வரும்?''
''தந்தை எல்லாச் சொத்தையும் உனக்கே எழுதி வைத்திருந்தாலும் சொத்து முழுவதும் உனக்குக் கிடைக்குமா?''
''எப்படிக் கிடைத்திருக்கும்? அடிமை என்னைக் கண்டுபிடிக்க முயற்சி செய்திருக்க மாட்டான். அப்படிக் கண்டுபிடித்தாலும் தகவல் சொல்லியிருக்க மாட்டான். எல்லாவற்றையும் தானே அனுபவித்துக் கொண்டிருப்பான், அல்லது விருப்பம் போல் செலவழித்திருப்பானே!''
''அதைத் தடுக்கத்தான் உன் தகப்பனார் இப்படிச் செய்திருக்கிறார். அவரது சொத்துக்களில் ஒன்று அந்த அடிமை. ஏதாவது ஒன்றை நீ எடுத்துக் கொள்ளலாம் என்பதால், அந்த அடிமையை எடுத்துக் கொள். அவனுக்குச் சொந்தமானவை எல்லாம் உனக்குத்தான் சொந்தம். அதுதானே சட்டம்?'' என்றார் மதகுரு.
எந்தப் பிரச்னையையும் தீர ஆலோசித்தால் அதற்கு விடை கிடைக்கும் என்பதைக் கூறுகிறது இக்கதை.
'சொத்தெல்லாம் போய்விட்டதே' என்று அழாமல் இளைஞன் அறிவில் சிறந்த ஒருவரை அதாவது தன் குருவை அடைந்தான். அவர் யோசனை செய்தார். பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தது.
வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்பட்டால், நாம் அதைத் தீர்க்க என்ன வழி என்று சிந்தித்துப் பார்ப்பதோடு நம்மை விட அறிவில் சிறந்தவர்களை அணுக வேண்டும். அப்போது விடை தன்னால் கிடைக்கும்.