அரசர் முன்பு அரண்மனை வீரர்கள், திருடன் ஒருவனைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.
திருடன் செய்த குற்றத்தைக் கேட்ட அரசர், "இவனை இழுத்துக் கொண்டுபோய் தூக்கில் போடுங்கள்!” என்று உத்தரவிட்டார்.
திருடன், "அரசே! என்னைத் தூக்கிலிடுவதற்கு முன்பு, உங்களுக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும். அதாவது, என் தந்தை எனக்கு ஒரு ரகசிய மந்திரம் கற்றுக் கொடுத்திருக்கிறார். அந்த மந்திரத்தின் மூலம், ஒரு மாங்கொட்டையை நிலத்தில் நட்டு, ஒரே இரவில் அது மரமாகி, பழங்கள் கொடுப்பதை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்” என்றான்.
அரசர் திருடனின் வேண்டுகோளுக்குச் சம்மதித்தார்.
திருடன் மாங்கொட்டையை நடுவதற்கு, நிலத்தில் ஒரு குழி தோண்டினான்.
பிறகு அவன் மாங்கொட்டையைக் கையில் வைத்துக் கொண்டு, "அரசே! இந்த மாங்கொட்டையை வாழ்க்கையில் ஒரே ஒரு முறை கூட திருடாதவர்தான் பூமியில் நட வேண்டும். அப்போதுதான் நான் சொல்லும் மந்திரம் பலித்து, மாங்கொட்டை ஒரே இரவில் மரமாகி பழங்கள் தரும். நான் திருடிய குற்றம் செய்தவன். எனவே இந்த மாங்கொட்டை நான் நட்டால் பலன் தராது” என்றான்.
இவ்விதம் சொல்லிக் கொண்டே திருடன் அருகிலிருந்த உயர் அதிகாரியிடம், "நீங்கள் இந்த மாங்கொட்டையை நிலத்தில் நடுங்கள்” என்று கேட்டுக் கொண்டான்.
அவரோ, "நான் சிறுவனாக இருந்த போது, ஒரு சமயம் என் தம்பிக்குச் சொந்தமான ஓர் எழுதுகோலைத் திருடினேன். ஆதலால் நான் இந்த மாங்கொட்டையை நிலத்தில் நட முடியாது” என்று சொன்னார்.
திருடன் அரசர் அருகிலிருந்த அமைச்சரிடம், "நீங்கள் இந்த மாங்கொட்டையை நிலத்தில் நடுங்கள்” என்று கூறினான்.
அமைச்சர், "சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் இளைஞனாக இருந்த போது, எங்கள் ஊருக்கு வெளியே இருந்த ஒரு தோப்பில் மாம்பழம் திருடினேன். எனவே நான் இந்த மாங்கொட்டையை நடுவதற்கில்லை' என்றார்.
திருடன், "அரசே! நீங்களாவது இந்த மாங்கொட்டையை நடுங்கள்!” என்று கேட்டுக்கொண்டான்.
அரசர் தயங்கியபடியே, "நான் சிறுவனாக இருந்த போது, ஒரு சமயம் என் மாமா வீட்டிற்குச் சென்றிருந்தேன். நான் அங்கு ஒரு பந்து திருடினேன். ஆகவே நான் இந்த மாங்கொட்டையை நடுவதற்கில்லை” என்றார்.
திருடன் அரசர் முதலானவர்களைப் பார்த்து, "நீங்கள் எல்லோரும் பெரிய பெரிய மனிதர்கள். நீங்களும் திருட்டுக் குற்றம் செய்தவர்கள்தான். நான் ஏதோ பசிக்கொடுமையால் திருடினேன். இப்போது என்னை நீங்கள் தூக்கிலிடப் போகிறீர்கள்!” என்றான்.
அரசர் திருடனை மன்னித்து, அவனை எச்சரித்து விடுதலையும் செய்தார்.