மகாபாரதப் போர் ஆரம்பிக்கும் முன் அர்ஜுனனும் துரியோதனனும் பகவான் ஸ்ரீகிருஷ்ணனிடம் உதவியை நாடி வந்தார்கள்.
இருவருக்குமே, தான் சொந்தக்காரன் என்பதால் பகவான் அவர்களுக்கு உதவ முடிவு செய்தார்.
ஆயுதம் ஏந்தாத ஸ்ரீகிருஷ்ணர் ஒரு புறம், ஸ்ரீகிருஷ்ணரின் ராணுவ பலம் மற்றொரு புறம். யாருக்கு எது வேண்டுமோ கேட்டுக் கொள்ளலாம்.
அர்ஜுனன் ஆயுதம் ஏந்தாத ஸ்ரீகிருஷ்ணரைத் தன் தேரோட்டியாக இருக்க வேண்டுமென்று கேட்டுப் பெற்றான்.
துரியோதனனோ ஸ்ரீகிருஷ்ணனின் ராணுவபலத்தைப் பெற்றுச் சென்றான்.
துரியோதனன் சென்றவுடன் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனை நோக்கி, ''அர்ஜுனா, என்ன முட்டாளாக இருக்கின்றாய்! போர்க்களத்தில் ராணுவ பலம்தான் முக்கியம். அதைப் பெறுவதைவிட்டு, ஆயுதமேந்தாத என்னை உனக்குத் தேரோட்டியாக ஏன் ஏற்றுக் கொண்டாய்?'' என்று கேட்டார்.
''என் வாழ்க்கையில் வந்த இந்தப் போரைச் சந்திக்க எனக்குத் திறமையும் வலிமையும் தேவையான ஆயுதங்களும் உள்ளன. ஆனால் என்னை வழிநடத்த யாருமில்லை. அதற்காகவே உன்னை என் வழிகாட்டியாகக் கேட்டுப் பெற்றேன்'' என்றான் அர்ஜுனன்.
பகவான் தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிய அர்ஜுனன் வென்றான். ராணுவ பலம் தன்னைக் காக்கும் என்று நம்பிய துரியோதனன் தோற்றான்.
நம்மில் பலரும் துரியோதனனைப் போன்று உடல் பலம், பண பலம், பதவி பலம் போன்றவை காப்பாற்றும் என நம்புகிறோம். இவற்றையெல்லாம் இறைவனிடம் வரமாகவும் வேண்டுகின்றோம். ஆனால் அவற்றையெல்லாம் அடைந்தாலும் வாழ்க்கையில் தோற்றுவிடுகிறோம்.