முன்னொரு காலத்தில் ஓர் அடிமை ஓர் இளம்பெண்ணைக் காதலித்தான். அவள் ரோமானிய சக்கரவர்த்தி சீசரின் மகள்.
அவர்களின் காதலைப் பற்றிக் கேட்டு கொதித்துப் போன சீசர், அடிமையைக் கைது செய்து, அக்கால வழக்கப்படி, ஒரு போட்டி மைதானத்தில் நிறுத்தினான்.
அங்கே இரண்டு மூடப்பட்ட ரகசியக் கதவுகள். ஒரு கதவின் பின்னே பேரழகியான நாட்டியக்காரி ஒருத்தி. மற்றொரு கதவின் பின்னே பசித்த சிங்கம் ஒன்று.
"நீ சிங்கம் இருக்கும் கதவைத் திறந்தால் அதற்கு இரை ஆவாய். நாட்டியக்காரி இருக்கும் கதவைத் திறந்தால் அவளை மணந்து கொண்டு சுதந்திரமாக வாழ்வாய்" என்று ஆணையிட்டான் மாமன்னன்.
எந்தக் கதவின் பின்னே யார் உண்டு என்ற ரகசியம் அரசனுக்கும், இளவரசிக்கும் மட்டுமே தெரியும். அடிமைக் காதலன் கண்களால், தன் காதலியான இளவரசியிடம் உதவி கேட்டான்.
அவளும் கண்களால் வலது பக்கக் கதவை திறக்கச் சொல்லி சாடை காட்டினாள்.
அடிமை உற்சாகமாக வலது பக்கக் கதவைத் திறந்தான்.
வலது பக்கக் கதவிற்குப் பின்னால் இருந்த சிங்கம் பாய்ந்து வந்து அவனை அடித்துக் கொன்றது.
இளவரசி, தன்னைக் காதலித்த அடிமைக்குச் சிங்கம் இருந்த அறைக்கதவைத் திறக்கச் சொல்லி ஏன் சொன்னாள் தெரியுமா?
வேறென்ன, எந்தப் பெண்ணும் தன் காதலனை, கணவனை வேறொருத்திக்குத் தருவதை விட சிங்கத்திடம் தரவே விரும்புவாள்.