முன் காலத்தில், திறமை வாய்ந்த அரசனொருவன் தன் நாட்டை நீதி தவறாமல் ஆண்டு வந்தான். ஆனால் அவனுக்கு ஒரு குறை இருந்தது. அவனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. அரசனும், அரசியும் பல கோயில்களுக்குச் சென்று தங்களுக்குக் குழந்தை வரமளிக்கும்படி வேண்டி வந்தனர். சில காலங்களுகு பிறகு கடவுளின் ஆசியால் அரசியார் கருவுற்றார். அழகிய பெண் குழந்தையைப் பெற்றார். மனம் குளிர்ந்த அரசர் நாட்டில் மாபெரும் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.
அந்த விழாவிற்கான யாகங்கள் செய்வதற்கு ஆறு முனிவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
யாகம் முடிந்து முனிவர்கள் குழந்தையை ஆசிர்வதித்தனர். முதல் முனிவர், “நீ நல் உள்ளம் கொண்டவளாய் இருப்பாயாக” என்றார். இரண்டாம் முனிவர், ” நீ நேர்வழியிலும், தர்ம காரியங்களில் ஈடுபாடு கொண்டவளாய் இருப்பாயாக” என்றும், மூன்றாம் முனிவர், ” நீ சிறந்த நாட்டிய அரசியாக இருப்பாய்” என்றும், நான்காம் முனிவர், ” நீ திறமையாக பாடுவாய்” என்றும், ஐந்தாம் முனிவர், “நீ அழகியாக விளங்குவாய்” என்றும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தனர். ஆறாம் முனிவர் ஆசிர்வதிக்கும் சமயம் அரண்மனை கதவு வேகமாக திறக்கப்பட்டது.
உள்ளே நுழைந்த மந்திரவாதி, “ஏன் என்னை இந்த விருந்திற்கு அழைக்கவில்லை? என்னை அழைக்காததால் நான் உன் மகளுக்குச் சாபமிடுகிறேன். உன் மகள் ஊசியால் காயம் ஏற்பட்டு இறப்பாள்” என்று சாபமிட்டான். பின்னர் அவன் அங்கிருந்து கிளம்பினான். விருந்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆறாம் முனிவர் கூறினார், “யாரும் கவலைப்பட வேண்டாம், நான் இவளது சாபம் குறையும் படியாக செய்கிறேன். இளவரசி இறக்க மாட்டார். இவரது உடலில் ஊசியால் பாதிப்பு ஏற்பட்டால் நூறு வருடங்கள் உறக்கத்தில் மட்டுமே இருப்பார். அரச குலத்தைச் சேர்த ஒருவர் இவரை நேருக்கு நேர் பார்க்கும் பொழுது உயிர் பேற்று எழுவார்” என்றார்.
இச்சம்பவத்திற்கு பிறகு அரசன் நாட்டிலுள்ள அனைத்து ஊசிகளையும் ஒன்று சேர்த்து புதைகக் கட்டளையிட்டான்.
பதினாறு வருடங்களுக்கு பிறகு இளவரசி அழகாக வளர்ந்திருந்தாள். இந்நிலையில் ஒரு நாள் அரசனும் அரசியும் வெளியூர் பயணம் மேற்கொண்டனர். இளவரசி அரண்மனையில் இருந்தாள். அரண்மனையை விட்டு வெளியே வந்த இளவரசி நடை பாதை அருகில் ஒரு குகையைக் கண்டாள். குகையின் உள்ளே அவள் காணாத அழகிய அறை இருந்தது. அந்த அறைக் கதவைத் திறந்தாள். அங்கே ஒரு கிழவி ஊசியால் நூல் தைத்துக் கொண்டிருந்தாள். கிழவியின் அருகே சென்று பேசிய இளவரசி, அவளிடமிருந்த ஊசியை வாங்கி நூல் தைத்துப் பழகத் தொடங்கினாள். அப்போது, அந்த ஊசி அவளது கையைத் தைத்தது.
அந்த வலியால் துடித்த இளவரசி தரையில் சாய்ந்தாள். அதைக் கண்டு சிரித்தான் கிழவி உருவத்திலிருந்த மந்திரவாதி. காணாமல் போன இளவரசியைச் சில நாட்களுக்குப் பிறகு கண்டு பிடித்தார்கள். அரண்மனைக்கு வந்த முனிவர் கூறினார். “இளவரசியுடன் நான் உங்களை வாழச் செய்கிறேன். நீங்கள் அனைவரும் நூறு வருடங்களுக்கு உறக்கத்தில் இருங்கள். அதன் பிறகு ஒரு இளவரசன் உங்களை எல்லாம் காப்பாற்றுவார்” எனக் கூறி அனைவரையும் ஊறக்கத்தில் ஆழ்த்தினார். அரண்மனையின் உள்ளே யாரும் போகமல் இருக்க முற்புதரால் மறைத்தார்.
நூறு வருடங்களுக்கு பிறகு ஒரு இளவரசன் அவ்வழியில் வந்தான். ஊர் மக்கள் முற்புதராய் இருந்த அரண்மனை பகுதியில் நாகம் இருப்பதாக கூறினார்கள். அந்நாகத்தை அழித்து அனைவரையும் காப்பாற்றுவதாக இளவரசன் கூறினான். தனது வாளை எடுத்து முற்புதரை வெட்டினான். அதை அவனால் வெட்ட முடியவில்லை. அங்கு வந்த முனிவர், அவனுக்கு மந்திர வாள் ஒன்றை வழங்கினார். இவை அனைத்தையும் தனது மாயக்கண்ணாடி வழியாகக் கவனித்துக் கொண்டிருந்த மந்திரவாதி அவ்விடத்தில் நாகமாகத் தோன்றினான். இளவரசனை நோக்கி வாயிலிருந்து நெருப்பைக் கக்கினான்.
இளவரசன் தன் வாளால் நெருப்பை தடுத்தான். அவன் வாளில் பட்ட நெருப்பு நாகத்தின் கண்களில் பட்டது. உடனே இளவரசன் அந்த நாகத்தை ஒரே வெட்டில் வெட்டிக் கொன்றான். மந்திரவாதி இறந்தவுடன் அந்த அரண்மனை முன்பிருந்தது போல் அழகாக காட்சியளித்தது. அங்கே உறக்கிக் கொண்டிருந்த இளவரசி உயிர் பெற்று எழுந்தாள்.
அங்கு வந்த முனிவர் அனைத்து விபரங்களையும் கூறினார். இளவரசனுக்கு நன்றி கூறினாள் இளவரசி. அரண்மனையில் உள்ள மற்றவர்களும் தூக்கம் கலைந்து எழுந்தார்கள். இளவரசன் இளவரசியை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்.