ஒரு நாள் காட்டு அரசனான சிங்கமும், மிக முக்கிய மந்திரியாகிய நரியும் தங்கள் காட்டு நிர்வாகம் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தன.
இந்நிலையில் அவர்கள் பேச்சு, அவர்களின் சொந்த விஷயங்களுக்குத் திரும்பியது.
சிங்கம் அதன் வலிமையைப் பற்றி மிக அதிகமாகப் பெருமை பேச ஆரம்பித்தது. நரி அதன் இயல்பான பசப்பும் பாசாங்குமாகச் சிங்கத்தின் தற்புகழ்ச்சிக்கு ஒத்துப் பாடியது. சிங்கம் அளவுக்கு மேல் பீற்றிக் கொண்ட போது நரி, “ இங்கே பாருங்கள் அரசே, உங்களைவிட வலிமையான மனித மிருகத்தை உங்களுக்குக் காட்டுகிறேன்!” என்றது.
சிங்கமும் நரியிடம் அந்த மிருகத்தைக் காட்டச் சொல்லியது.
நரி வழிகாட்ட இருவரும் சேர்ந்து நடந்தனர்.
அவர்கள் முதலில் ஒரு குட்டிப் பையனைக் கண்டனர். உடனே சிங்கம், “இதுவா அந்த வலிமையான மிருகம்?” என்று கேட்டது.
“இல்லை, அரசே! இவன் இனிமேல்தான் மனிதனாக வேண்டும்!” என்று சொன்னது, நரி.
சிறிது தூரம் சென்றதும், அவை கம்பு ஊன்றி நடக்கும் ஒரு கூனல் கிழவனைக் கண்டன. அவனது தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் ஆடிக் கொண்டிருந்தது.
அந்தக் கிழவனைப் பார்த்ததும் சிங்கம் “இதுதான் அந்த அதிசயமான வலிய மனிதனா?” என்று கேட்டது.
“இல்லை, அரசே! இவன் மனிதனாக இருந்தவன்!” என்றது நரி.
இரண்டும் தொடர்ந்து நடந்தன. சிறிது தூரத்தில் இளமைக்கான முழு கம்பீரத்தோடு இளம் வேட்டைக்காரன் ஒருவன் அவனது வேட்டை நாய்களோடு எதிரே வந்தான்.
“அரசே! அங்கே பாருங்கள்! அவன்தான் வலிமையான மனிதன்! உங்கள் வலிமையை எல்லாம் அவனிடம் காட்டுங்கள்! நீங்கள் வெற்றி பெற்றால் இந்தப் பூமியிலேயே நீங்கள்தான் அதிக வலிமையானவர்!” என்ற நரி, அருகிலிருந்த கற்குகை ஓன்றில், நடக்கப் போவதை வேடிக்கை பார்க்க வசதியாகப் பதுங்கிக் கொண்டது.
சிங்கம் கர்ஜித்துக் கொண்டே அவனை நோக்கி முன்னேறியது. அவனை நெருங்கும் நேரத்தில் நாய்கள் அதை வழி மறித்தன.
சிங்கம் அவைகளைச் சிறிதும் சட்டை செய்யவில்லை, தன் முன்கால்களாலேயே அடித்துத் தள்ளியது. அவை சிதறி விழுந்து, ஊளையிட்டுக் கொண்டே அந்த மனிதனை நோக்கி ஓடின.
அதன் பின்னர் அவன் துப்பாக்கியால் சுட்டான். குண்டு சிங்கத்தின் தோளைத் துளைத்தது. அதற்கும் சிங்கம் அஞ்சாமல் முன்னேறியது. பின்னர் ஆவன் தன் இரும்புக் கத்தியை உருவிப் பல தடவை சிங்கத்தை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டான். சிங்கம் பயந்து திரும்பிய போது, குண்டுகள் பறந்து வந்தன. சிங்கம் உயிர் தப்பினால் போதுமென்று தலைதெறிக்க ஓடியது.
தன்னருகில் சிங்கம் வந்ததும் நரி அவசரமாகக் கேட்டது.
“அரசே, இப்போது சொல்லுங்கள்... நீங்கள்தான் வலிமையானவரா?”
“இல்லை, இல்லை. அந்தப் பெயரை அந்த மனிதனே எடுத்துக் கொள்ளட்டும்! நான் விட்டுவிடுகிறேன்!” என்றது சிங்கம்.
“அவனைப் போல ஒருவனை நான் இதுவரை பார்த்ததேயில்லை, முதலில் அவனது மெய்க்காவலர்கள் பத்துப்பேர் ஏன்னைப் புரட்டியெடுக்க வந்தனர். நான் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை, அவனைத் தீர்த்து விடுவதென்று பாய்ந்த போது அவன் என் முகத்தில் தீயைத் துப்பினான். அதில் கொஞ்சம் காயம்பட்டாலும் அவ்வளவு மோசமாக இல்லை. மீண்டும் அவனைத் தரைக்கு இழுக்க முயன்றேன், அவனோ விலா ஏலும்பு ஒன்றை உருவி என் மீது பாய்ச்சிப் பலத்த காயங்களை ஏற்படுத்தி விட்டான். என் கண்களில் தூசி பறக்க ஆரம்பித்து விட்டது. சமாளித்துக் கொண்டு திரும்பினேன், அவனோ தீக்குண்டுகளை என் மீது எறிந்தான்! தப்பித்தால் போதுமென்று ஓடி வந்துவிட்டேன். போதும் நரியே! போதும்! அவனுக்கே அந்த வலிமையானவன் பட்டத்தைக் கொடுத்துவிடு!”