ஒரு காட்டுப் பூனை, காட்டு முயலைத் துரத்திக்கொண்டு சென்றது.
பிடிபடுகிற நேரத்தில், மரத்திலிருந்த பொந்துக்குள் ஓடி ஒளிந்துகொண்டது முயல்.
காட்டுப் பூனை அதன் முன்னேயே அமர்ந்து, முயல் வெளியே வரும்வரை காத்திருப்பது என்று முடிவு செய்தது. எப்படியும் முயலுக்குப் பசியெடுக்கும், அது வெளியே வந்துதான் தீரவேண்டும், அப்போது பிடித்துக் கொள்ளலாம் என்று தீர்மானமாக இருந்தது அந்தப் பூனை.
ஆனால், வெளியே போனால் பூனை தன்னைக் கொன்றுவிடும் என்பது முயலுக்குத் தெரிந்தே இருந்தது.
ஆனாலும், எவ்வளவு நேரம்தான் பொந்துக்குள்ளேயே இருப்பது? எனவே, அது ஒரு யோசனை செய்தது.
‘ஏ பூனையே! நான் வெளியே வருகிறேன். உனக்கு உணவாகவும் சம்மதிக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை! இந்த மரத்துக்கு முன்னால் நெருப்பு மூட்டு. நான் அந்த நெருப்பில் குதித்து வறுபடுகிறேன். அதன் பின் என்னை நீ உணவாகப் புசி! என்னைப் பச்சையாக உண்பதை நான் விரும்பவில்லை’ என்றது முயல்.
காட்டுப் பூனையும் ‘இதுவும் நல்ல யோசனையாக இருக்கே’ என்று எண்ணி, தீ மூட்டியது.
நெருப்பு நன்றாகக் கனன்று எரியத் தொடங்கியதும், முயல் திடீரென பொந்திலிருந்து பாய்ந்து, அந்த நெருப்புத் துண்டுகள் பூனைமீது தெறிக்குமாறு சிதற அடித்துவிட்டு, குதித்துத் தப்பி ஓடிவிட்டது.
அதனால், பூனையின் நெஞ்சுப் பகுதியிலிருந்த முடிகள் கருகி, திட்டுத் திட்டாக வெள்ளையாகிவிட்டது.
அதனால்தான் காட்டுப் பூனைகள் அனைத்தும் வெள்ளைப் புள்ளிகளுடன் இருக்கின்றன.