பிரபல வழக்கறிஞர் ஒருவர் மகிழ்ச்சியிலும், குழப்பத்திலும் மூழ்கி இருந்தார். மகிழ்ச்சிக்குக் காரணம் ஒரு வழக்கில் கிடைத்த வெற்றி.
நகரின் மிக பெரிய பணக்கார நண்பர், தன் இறந்து போன தந்தை சொல்லாமல் விட்டுப்போன சொத்துக்கள் எங்கெங்கு இருக்கின்றன என தேடுவதிலேயே பாதி காலத்தை கழித்தவர்.
ஒருவராகப் பல கோடி ருபாய் மதிப்புள்ள நிலம் அவர் தந்தை வாங்கி இருப்பினும், அது மற்றொருவரின் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதை மீட்பதற்காகப் போட்ட வழக்கில், இன்று தான் அந்தத் தொழிலதிபருக்குச் சாதகமான தீர்ப்பு வந்திருக்கிறது. அதைக் குறித்தே வழக்கறிஞருக்கு மகிழ்ச்சி.
குழப்பத்துக்கு காரணமும் இந்த வழக்கு தான்.
சொத்து பிரச்சனைக்காக ஊர் ஊராக அலைந்து கொண்டு இருப்பதால், இந்த வழக்கை முழுதாக நீயே பார்த்துக்கொள் என் நண்பரான வழக்கறிஞரை அவர் அன்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதனால் எந்தக் கட்டணமும் வாங்கவில்லை. இப்போது ஜெயித்த பின் நண்பர் தருவாரா? நட்புக்காக இலவச சேவை செய்ததாக நினைத்துக் கொள்வாரா? என்று குழப்பம்.
வெற்றித் தகவலைச் சொன்னதும், அன்றிரவே வழக்கறிஞரைப் பார்க்க வந்த தொழிலதிபர், அழகான ஒரு பொம்மையை பரிசாகத் தந்தார். இது லண்டனில் வாங்கியது பொம்மை மாதிரி குழந்தைகள் விளையாடலாம், சேமிக்கவும் உண்டியலாகப் பயன்படுத்தலாம்.
என்னய்யா இது விளையாட்டு? உனக்காக நான் பலகோடி ரூபாய் சொத்தை வாதாடி மீட்டுத் தந்திருக்கிறேன். நீ என்னவென்றால் ஒரு பொம்மையைத் தருகிறாய். வெளி ஆளாக இருந்தால் ஐந்து லட்ச ரூபாய் கட்டணம் வாங்கி இருப்பேன் தெரியுமா? எனக் கொதித்தார்.
தொழிலதிபரின் முகம் சுருங்கியது. அந்த உண்டியல் பொம்மையை வாங்கித் திறந்தார். இதுக்குள்ள பத்து லட்சம் ரூபாய் வைத்திருந்தேன். திறந்து கூடப் பார்க்காமல் ஆத்திரப்பட்டீங்க. இப்போ நீங்க சொன்னபடி ஐந்து லட்சம் நான் எடுத்துக்கறேன். உங்க கட்டணம் ஐந்து லட்சம் உள்ளே இருக்கு’ எனச் சொல்லிப் பொம்மையைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.