செல்வந்தன் ஒருவன் தனது வணிகம் தொடர்பாக வெளியூருக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அவனது பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
அந்தப் பண்ணை வீடு அழகாக இருந்ததால், அதைப் பலர் விலைக்குக் கேட்டும் கொடுக்காமல் வைத்திருந்தான் அந்தச் செல்வந்தன். தற்போது அந்த வீடு நெருப்பால் எரிந்து போவதுடன் பெரும் இழப்பாகப் போகிறதே என்று மிகுந்த கவலையுடன் அதைப் பார்த்து அழுது புலம்பினான். அங்கிருந்தவர்கள் அனைவரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவனது மூத்த மகன் ஓடிவந்து , “தந்தையே, நீங்கள் ஊருக்குப் போயிருந்த வேளையில், இந்த வீட்டை மூன்று மடங்கு இலாபத்துடன் நேற்றே நான் ஒருவருக்கு விற்று விட்டேன். இதனால் நமக்கு நட்டம் ஏதுமில்லை” என்றான். அதைக் கேட்ட அந்தச் செல்வந்தனுக்கு மகிழ்ச்சி வந்தது. அவனுடைய சோகம் மறைந்து போனது. இப்போது அந்தச் செல்வந்தனும் வீடு தீப்பற்றி எரிவதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான். சில நிமிடங்களுக்கு முன்னால் அவனிடமிருந்த சோகம் அப்போது இல்லை.
சிறிது நேரத்தில் அங்கு ஓடி வந்த இரண்டாவது மகன், “தந்தையே, வீடு எரிவதைப் பார்த்துக் கவலையுமில்லாமல் இப்படிச் சிரித்துக் கொண்டிருக்கிறீர்களே... நாங்கள் நேற்று இந்த வீட்டை விற்று விட்டாலும், நாங்கள் இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கி இருக்கிறோம். வீடு முழுமையாக எரிந்து போய்விட்டால், அவர் எப்படி முழுமையான பணத்தைத் தருவார்?” என்றான். அதைக் கேட்ட அந்தச் செல்வந்தன் மீண்டும் கவலையுடன் அழத் தொடங்கினான். தனது வீடு இப்படி எரிந்து சாம்பலாகிறதே என்று புலம்பினான்.
அப்போது அங்கு வந்த அவரது மூன்றாவது மகன், ”தந்தையே, நீங்கள் கவலைப்பட வேண்டாம், இந்த வீட்டை வாங்கியவர் மிகவும் நல்லவர் போலிருக்கிறது. இந்த வீட்டை வாங்க நான் முடிவு செய்த போது, இந்த வீடு தீப்பற்றிக் கொள்ளும் என்று எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. ஆனால், நான் முழுமையாகப் பேசியபடி உங்களுக்குத் பணத்தைக் கொடுத்துவிடுவேன் என்று சொல்லிவிட்டார்” என்றான். அதைக்கேட்ட அந்தச் செல்வந்தன் கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கூட்டத்தில் ஒருவனாக மீண்டும் வீடு எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
இங்கு எந்த மாற்றமுமில்லை, அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு அவனைச் சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையதல்ல என்று நினைக்கும் போது அந்த இழப்பு அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. நான், என்னுடையது, எனக்குச் சொந்தமானது என்ற எண்ணமே பற்று. உலகில் எதுவும் நிரந்தரமில்லை, ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழியக்கூடியது. நான் உட்பட அனைத்துமே குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு அழியக்கூடியதுதான். இதை நாம் நினைவில் கொண்டாலே இந்த உலக வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும்.