இந்த மனிதர்கள் என்னை ஏன் வெறுக்கிறார்கள், நான் நெருங்கிச் சென்றால் பயப்படுகிறார்களே...! என்று இறப்பு மிகுந்த கவலையடைந்தது.
மனிதர்கள் அனைவரும் ஒருநாள் என்னை வந்தடைந்துதான் ஆக வேண்டும், இந்த உண்மை அவர்களுக்குத் தெரிந்திருந்தும் நம்மை மட்டும் ஏன் வெறுக்கிறார்கள்? உலகை விட்டுப் பிரிந்து வரத் தயங்குகிறார்கள், வாழ்க்கை மறையப் போவதை நினைத்து வருந்துகிறார்கள்! அவர்கள் இறந்ததும் உறவினர்களெல்லாம் கதறி அழுகிறார்கள், மறு பிறப்பு என்று ஒன்றிருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்... என்று இறப்பு மனிதனின் நினைவுகளை நினைத்துப் பார்த்தது.
மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையானதைத் தேடாமல், பெரும் சொத்துகளைத் தனக்குப் பிறகு யாருக்காகத் தேடி வைக்கிறார்கள்? இறப்பிற்குப் பின்பு, அவைகளெல்லாம் தன்னுடன் வராது என்று தெரிந்திருந்தும் அதைச் சேர்ப்பதில் அக்கறை கொள்வது ஏனென்றுதான் தெரியவில்லை, அவர்களிடம் நான் உயிர் ஒன்றை மட்டுமே கேட்கிறேன். இதில் பணக்காரன், ஏழை, பெரியவர், சிறியவர், நகரம், கிராமம், நாடு, மொழி, சமயம், சாதி, இனம் என்று தேவையில்லாத பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு, அவற்றை விட்டுப் பிரிய மனமின்றி என்னிடம் அச்சம் கொள்கிறார்களே...! எந்தப் பாகுபாடுமில்லாமல் எல்லோருடைய உயிரையும் தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க என்னிடம் மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? பிறப்பின் போது மகிழ்ச்சியடையும் உறவும், நட்பும் இறப்பின் போது மட்டும் கவலை கொள்வதேன்? என்று பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவித்த இறப்பு, தன் சந்தேகங்கள் அனைத்தையும் வாழ்க்கையிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென நினைத்துப் பூமிக்கு வந்து சேர்ந்தது.
இறப்பைக் கண்டு பயந்த வாழ்க்கை ஓடி ஒளிந்தது. அதனை விடாமல் துரத்திய இறப்பு வாழ்க்கையிடம், “இந்த மனிதர்கள் உன்னை அதிகம் விரும்புகிறார்கள். என்னைக் கண்டாலே வெறுக்கிறார்களே...?” என்று கேட்டது.
அதைக்கேட்ட வாழ்க்கை, “நான் ஒரு அழகான பொய், ஆனால் நீ வேதனை தரக்கூடிய உண்மை” என்றது.
இறப்பு ஒன்றும் தெரியாமல் விழித்தது.
வாழ்க்கை தொடர்ந்து பேசத் தொடங்கியது.
“மனிதன் பிறக்கும் பொழுது, வாழ்வில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியாது. ஒருவரும் இறப்பைப் பற்றி நினைப்பதில்லை. இளம் வயதில் நேரமும் சுறுசுறுப்பும் இருக்கும். பணமிருக்காது. கல்வியிலும் விளையாட்டிலும் இளம் வயது கடந்துவிடும். உழைக்கும் வயதில் பணமும் சுறுசுறுப்பும் இருக்கும் நேரமிருக்காது. வாழக்கை ஒரு உல்லாசப் பயணம். ஆனால், வாழ்க்கையும், இறப்பும் ஒருமுறைதான் வரும். இந்த மனிதர்கள் உயிரில் சொந்தங்களை வைத்துக் கொள்கிறார்கள், சொந்தங்களில் உயிரை வைப்பதில்லை”
தொலைவில் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் இருப்பதைப் பார்த்த இறப்பு, “இன்று உன்னிடமிருக்கும் அவர்கள் ஒருநாள் என்னிடம் வந்துதான் ஆக வேண்டும்” என்று வாழ்க்கையிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியது.
செல்லும் வழியில் வயது மூப்படைந்த சிலரின் முணகல் சத்தம் கேட்க எட்டிப்பார்த்தது.
இறப்பைக் கண்ட அவர்கள், “எங்களை உன்னுடன் அழைத்துச் செல்ல வந்து விட்டாயா? இதோ வருகிறோம்!” என்றபடி இறப்பை நோக்கி வந்தார்கள்.
அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்கள், உறவுகளால் கைவிடப்பட்டு இறப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள்.
இப்போது இறப்புக்கு வாழ்க்கையின் உண்மை புரிந்தது. வாழ்க்கையைப் பார்த்துச் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தது.