ஒரு பால்வியாபாரி தினமும் பாதிக்குப் பாதித் தண்ணீர் சேர்த்து விற்று வந்தார், நிறைய பணமும் சம்பாதித்தார்.
மேலும் ஒரு மாடு வாங்க நினைத்த அந்த வியாபாரி, பால் விற்ற காசை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டார்.
சந்தைக்குச் செல்லும் வழியில் அவருக்குப் பயணக் களைப்பு ஏற்பட்டது.
களைப்பைப் போக்க நினைத்த அவர் அங்கிருந்த ஆற்று ஓரமாக ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தார்.
அசையிலிருந்த அவர் சிறிது நேரம் கண்ணயர்ந்து போனார்.
அந்த மரத்திலிருந்த குரங்கொன்று அவர் வைத்திருந்த காசுப் பையைத் தூக்கிக் கொண்டு அருகிலிருந்த மரத்தின் மேல் போய் நின்று கொண்டது.
விழித்துப் பார்த்த பால் வியாபாரி, தனது பணப்பை குரங்கிடம் மாட்டிக் கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியானான்.
அவன் அந்தக் குரங்கிடம் பணப்பையைத் தரும்படிக் கெஞ்சிக் கூத்தாடினான்.
கடைசியாக அந்தக் குரங்கு அந்த பணப்பையை அவிழ்த்து அதிலிருந்து ஒரு காசை எடுத்து அவனை நோக்கிப் போட்டது.
அதைப் பார்த்த அவன் மகிழ்ச்சியானான்.
அந்தக் குரங்கு பைக்குள்ளிருந்து எடுத்த அடுத்த காசை அங்கிருந்த ஆற்றில் போட்டது. அதைப் பார்த்த அவன் வாய்விட்டுக் கதறினான்.
உடனே குரங்கு அடுத்த காசை அவனை நோக்கிப் போட்டது, அதற்கடுத்த காசை ஆற்றுக்குள் வீசியது.
இப்படியே அந்தப் பையிலிருந்த காசைத் தரையிலும் தண்ணீரிலுமாகப் போட்டது.
பால்காரனுக்கு அப்போதுதான் புரிந்தது, தான் பாலில் தண்ணீர் ஊற்றிச் சம்பாதித்த காசு தண்ணீரிலேயே போகும் என்பது.
அதற்குப் பின் அவன் பாலில் தண்ணீர் சேர்த்தே விற்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டான்.