கங்கைக் கரை. குகன் வழக்கம் போலப் படகைத் தொட்டுக் கும்பிட்டு, ஆற்று நீரில் காலை அலம்பிக்கொண்டு படகில் ஏறினான்.
ராமன், சீதை, லட்சுமணனைச் சுமந்து சென்ற, புனிதப் படகல்லவா அது!
படகில் அன்றைய தினம் சில புதிய நபர்கள் வந்தார்கள்.
அவர்களில் ஓர் இளைஞன் குகனிடம், “அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அங்கு செல்லாமல், இங்கேப் படகு ஓட்டிக் கொண்டிருக்கிறாயே...? உன்னை ராமர் அழைக்கவில்லையா? நீ அந்த விழாவில் கலந்து கொள்ளத் தகுதியில்லாதவனா?” என்று கேட்டான்.
குகன் அமைதியாகச் சொன்னான். “ஐயா! ராமபிரானுக்கு என் நினைவு வராதிருக்குமா? ‘உன்னோடு சேர்த்து ஐவரானோம்’ என்று என்னை அவருடைய நான்காவது தம்பியாகச் சொன்னாரே… அவருக்கா என்னை மறக்கும்?” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னான்.
“அப்படியென்றால் ஏன் உனக்கு அழைப்பு விடுக்கவில்லை?” என்று கேட்டான் அந்த இளைஞன்.
“பொதுவாக திருமணம், விழா என்றால் நெருங்கியவர்களுக்கெல்லாம் சில பொறுப்புகளைக் கொடுத்து நிறைவேற்றச் சொல்வார்கள் இல்லையா, அது போல எனக்கும் ராமர் பட்டாபிஷேகத்துக்கு வரும் மக்களை அக்கரையில் இருந்து படகில் அழைத்து வரும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. திருமணத்தின் போது இதுபோன்ற பொறுப்பை நிர்வகிக்கும் ஒருவரால் மணமேடைக்குச் சென்று திருமணத்தைப் பார்க்க முடியாத நிலைமை ஏற்படும். அதுபோலத்தான் எனக்கும். நான் மனத்திற்குள்ளாகவே ராமர் பட்டாபிஷேகத்தைப் பார்க்கிறேன். என் ராமர் என்னைப் பார்க்கிறார். நட்புடன் புன்னகைக்கிறார். ‘சாப்பிட்டு விட்டு வெகுமதிகளை வாங்கிச் செல்’ என்று பாசத்துடன் சைகை செய்கிறார். அந்த நிறைவை நான் இங்கேயே பெற்றுவிடுகிறேன். இதைத் தவிர எனக்கு வேறு என்ன வேண்டும்?”
குகனுடைய பதிலைக் கேட்ட அந்த இளைஞன் மட்டுமின்றி, படகில் பயணித்த அனைவருக்கும் கண்களில் நீர் திரண்டது.