அந்த இருட்டு அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் நல்ல ஒளிவிட்டு எரிந்து கொண்டிருந்தன.
அவை ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தன.
அப்போது அந்த அறையின் ஜன்னல் பகுதியின் வழியாகக் காற்று வீசியது. மெழுகுவர்த்திகள் பயந்து விட்டன.
காற்றை கண்டதும் அமைதி என்ற முதல் மெழுகுவர்த்தியானது பயத்துடன், ”ஐயோ ! காற்று வீசுகிறது… நான் அணைந்து விடப் போகிறேன்” என்று சோகமாக கூறியது.
அதன் மீது காற்று பட்டதும் அந்த மெழுகுவர்த்தி அணைந்து விட்டது!
அடுத்து இரண்டாவதாக, அன்பு என்ற மெழுகுவர்த்தியும், “காற்றை எதிர்த்து நிற்க முடியாது” என்று பலவீனமாகக் கூறியது.
அது கூறியவுடன் அணைந்து போய் விட்டது.
இந்த இரண்டு மெழுகுவர்த்தியும் அணைந்ததைப் பார்த்ததும் மூன்றாவதாக இருந்த அறிவு என்ற மெழுகுவர்த்தியும் பயந்து போனது.
“என்னாலும் காற்றை எதிர்க்க முடியாது” என்று கூறியவுடன் அணைந்து போய்விட்டது.
இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நான்காவது மெழுகுவர்த்தி சிறிது நேரம் காற்றுடன் போராடியது.
அந்த போராட்டம் சில நிமிடங்கள் தான்… பின் அது நல்ல பிரகாசமாக எரிய ஆரம்பித்தது.
அப்பொழுது அந்த அறைக்குள் ஒரு சிறுவன் நுழைந்தான். மூன்று மெழுகுவர்த்திகள் அணைந்து இருப்பதைப் பார்த்து, ”அடடா…! மூன்று மெழுகுவர்த்திகள் அணைந்து விட்டதே” என்று வருத்தத்துடன் கூறினான்.
அப்பொழுது அணையாமல் எரிந்து கொண்டு இருந்த மெழுகுவர்த்தி அச்சிறுவனிடம், ”தம்பி, கவலைப்படாதே… நான் இருக்கிறேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துக்கொள்” என்று கூறியது.
உடனே அந்தச் சிறுவன், ”மெழுகுவர்த்தியே உன் பெயர் என்ன? என்று அந்த நான்காவது மெழுகுவர்த்தியிடம் கேட்டான்.
அதற்கு அந்த மெழுகுவர்த்தி, ‘என் பெயர் நம்பிக்கை” என்று கூறியது.
அதற்கு அந்த சிறுவன் மெழுகுவர்த்தியிடம், நீ எப்படி அணையாமல் இருக்கிறாய் என்று இப்பொழுது தான் தெரிகிறது எனக் கூறினான்.
வாழ்க்கையும் அவ்வளவு தான். நாம் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக்கூடாது.