ஒரு இளம் பெண் விமான நிலையத்தின் பயணிகள் அறையில் தன் விமானத்துக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
விமானம் புறப்படப் பல மணி நேரம் இருந்ததால், நேரத்தைக் கழிக்க ஒரு புத்தகமும், பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கினாள். ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து அமைதியாகப் படிக்க ஆரம்பித்தாள். அருகில் மற்றொரு பயணி வந்து அமர்ந்தார். அவரும் தன் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். நடுவில் பிஸ்கட் பாக்கெட்டும் இருந்தது.
படித்துக்கொண்டே ஒரு பிஸ்கட்டை அவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
உடனே பக்கத்தில் உட்கார்ந்த பயணியும் ஒன்றை எடுத்துக் கொண்டார். “என்ன தைரியம்?” என்று நினைத்தாள்.
கோபம் வந்தது ஆனால் பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மெளனமாக இருந்தாள்.
அவள் ஒரு பிஸ்கட் எடுத்தால் அவரும் ஒரு பிஸ்கட் எடுத்தார். கடைசி பிஸ்கட் வந்தபொழுது அந்த மனிதன் அதைப் பாதியாக உடைத்து அவளுக்குக் கொடுத்துவிட்டு மீதியிருந்த பாதியை அவர் சாப்பிட்டார்.
எரிச்சலுடன் அங்கிருந்து எழுந்து சென்றாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு விமானத்தில் தன் கண்ணாடியை எடுக்கப் பையைத் திறந்தாள். அவள் வாங்கின பிஸ்கட் பாக்கெட் இருந்ததைக் கண்டு, தன் தவறை உணர்ந்தாள்.
அந்தப் பயணி தான் வாங்கிய பிஸ்கட் பாக்கெட்டை அவளுடன் கோபப்படாமல் பகிர்ந்து கொண்டார்.
மற்றொருவர் வாங்கிய பிஸ்கட்டைத் தன்னுடையது என்று எண்ணி, வெறுப்புடன் அவரைப் பார்த்ததை நினைத்து அவள் வேதனைப்பட்டாள்.
அவள் பொறுமையுடன் நடந்துக் கொள்ளாததால், நன்றி சொல்லவோ மன்னிப்பு கேட்கவோ ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை.