எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது.
மிகவும் விலை உயர்ந்த வைரம் அது. வியாபாரி எலி பிடிப்பவனைப் பார்த்து எப்படியாவது அந்த எலியைப் பிடித்து, அதன் வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
எலி பிடிப்பவனும் அதைப் பிடிப்பதற்கான பொருட்களுடன் வந்தான்.
அந்த எலி அங்கே, இங்கே என்று எலி பிடிப்பவனுக்குப் போக்கு காட்டி ஓடியது. பின்னர் அந்த எலி, ஆயிரக்கணக்கான எலிகள் இருந்த இடத்தில் போய் மறைந்து கொண்டது.
ஆயிரக்கணக்கான எலிகளிருந்த அந்த வைரம் முழுங்கிய எலியை எலி பிடிப்பவன், மிகச் சரியாகப் பிடித்துக் கொண்டு வந்தான்.
பின்னர் அவன், அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்து வியாபாரியிடம் கொடுத்தான்.
அதனைக் கண்ட வைர வியாபாரி, ‘ஆயிரக்கணக்கான எலிகள் இருக்கும் போது, இந்த எலிதான் வைரத்தை விழுங்கிய எலி என்று எப்படி கண்டுபிடித்தாய்?” என்று கேட்டான்.
உடனே அவன், “கூட்டமாக இருந்த எலிக்கூட்டத்தில், இந்த எலி மட்டும் சேராமல் ஒதுங்கி தனித்து நின்றிருந்தது. அதை வைத்துத்தான் பிடித்தேன்’ என்றான்.
வைர வியாபாரி, “தனித்திருப்பதுதான் வைரம் தின்ற எலி என்று எப்படி முடிவு செய்ய முடியும்?’ என்று கேட்டான்.
உடனே அந்த எலி பிடிப்பவன் சொன்னான்.
“இப்படித்தான்… பலபேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னைச் சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள். அதுவே... ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது” என்றான்.
அதை ஆமோதித்த வைர வியாபாரி, “உண்மைதான். நம்முடைய உறவுகளும் அப்படித்தான், இடையில் வந்து அழிந்து போகும் செல்வத்தை நம்பிக் கடவுள் கொடுத்த உறவுகளையும் நட்புகளையும் மறந்து போய் விடுகிறார்கள்” என்றான்.!