மனைவி ஒருநாள் தன் கணவனுக்குப் பிடித்த மீன் குழம்பு சமைத்தாள். இன்று எப்படியும் கணவனிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.
கணவன் வந்ததும் வேகமாகச் சாப்பிட அமரச் சொன்னாள், மனைவி சாப்பாடு பரிமாறினாள்.
”என்னங்க குழம்பு எப்படி இருக்கு?” என்று கேட்டாள்
”நல்லா இருக்கு. ஆனாலும் எங்கம்மா வைக்கும் கைப்பக்குவம் உனக்கு இல்லை, எங்கம்மா வைக்கும் மீன் குழம்பின் மணம் தெருவே மணக்கும்… அப்பப்பா… அப்படியொரு ருசி” என்று அம்மா வைக்கும் மீன் குழம்பின் ருசியைப் பாராட்டி எழுந்தார்.
மனைவிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
தன் கணவன், தான் வைத்த மீன் குழம்பின் ருசியைப் பாராட்டாமல் இருந்தால் கூட பரவாயில்லை, எதற்கெடுத்தாலும் என் அம்மா… வைக்கும் குழம்புக்கு ஈடு இணையில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். என்று முணுமுணுத்தபடி இருந்தாள்.
அப்போது அவளுடைய மகன் சாப்பிட வந்தான். அவனுக்கு சாப்பாடை வைத்து மீன் குழம்பைப் பரிமாறினாள்.
மகன் சாப்பிட்டு விட்டு, “அம்மா, எப்படிம்மா இப்படி மீன் குழம்பு வைக்கிறாய்? நான் நம்ம தெருவுக்குள் நுழைந்தவுடனேயே மீன் குழம்பு வாசனை அப்படி இருந்தது... உங்க அளவுக்கு யாராலயும் மீன்குழம்பு வைக்க முடியாதும்மா...” என்று சொல்லி அம்மாவைப் பாராட்ட ஆரம்பித்தான்.
அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.
“ஒரு மகன் யார் சமைத்ததைச் சாப்பிட்டாலும், தன் தாயின் சமையலைத் தான் அதிகம் பாராட்டுவான்” என்பது.