ஒரு பணக்காரன் தன்னுடைய கணக்குப் பிள்ளையிடம் விசாரித்தான்.
“நமக்கு எவ்வளவு சொத்து இருக்கும்… ?”
“பதினாறு தலைமுறைக்கு உட்கார்ந்தே சாப்பிடலாம் முதலாளி…” என்றார் கணக்குப் பிள்ளை.
அந்தப் பணக்காரனுக்குக் கவலை வந்தது.
“நம்முடைய சொத்து பதினாறு தலைமுறைக்குத் தான் வருமாம். அப்படியானால், என்னுடைய பதினேழாவது தலைமுறை என்ன ஆகும்…?”
அவனுக்குள் ஏற்பட்ட இந்தக் கவலை, அவனை நோயாளியாக மாற்றிவிட்டது. அந்த ஊரில் இருந்த அனைத்து மருத்துவர்களும் அவனைக் குணப்படுத்த என்னென்னவோ செய்து பார்த்து விட்டார்கள். அவனுடைய நோய் குணமாகவில்லை.
இந்நிலையில் ஒரு யோகி அவ்வூருக்கு வந்தார்.
அவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்தப் பணக்காரனைச் சந்தித்தார்.
“செல்வந்தனே, உன்னுடைய நாட்டில் இருக்கும் ஓரிரு பச்சிளம் குழந்தைகளுடன் கூடிய இளம் விதவையைத் தேடிக் கண்டு பிடி, அவள் தினசரிக் கூலி வேலைக்குப் போய்த்தான் சாப்பிட வேண்டிய நிலையில் இருக்க வேண்டும். பின்னர் அவளுக்கு இரண்டு வண்டிகள் நிறைய உணவு தானியங்களை அனுப்பி வை. அப்புறம் என்னிடம் வா... உன்னுடைய நோய்க்கு நான் நல்ல மருந்து தருகிறேன்” என்றார்.
பணக்காரனும் தனது வேலைக்காரர்களிடம், யோகி சொன்னபடி ஒரு இளம் விதவையைத் தேடிக் கண்டுபிடிக்கச் சொன்னான்.
அவர்களும் சில நாட்களில் ஒரு இளம் விதவையைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொன்னார்கள்.
பணக்காரன் அந்த யோகி சொன்னபடி, இரண்டு வண்டிகள் நிறைய உணவு, தானியங்களை அந்த இளம் விதவை வீட்டுக்குக் கொண்டு போய்க் கொடுக்கச் சொன்னான்.
தன்னுடைய வீட்டு முன் இரண்டு வண்டிகள் வந்து நிற்பதைப் பார்த்த அந்த இளம் விதவை என்னவென்று விசாரித்தாள்.
பணககாரன் வீட்டு வேலைககாரர்கள், தங்களுடைய முதலாளி அவளுக்கு உணவு, தானியங்கள் அனுப்பியிருப்பதாகச் சொன்னார்கள்.
உடனே அந்த இளம் விதவை தன்னுடைய மகளிடம், ”நம் வீட்டில் அரிசிப் பானையில் எவ்வளவு அரிசி இருக்கிறது?” என்று பார்க்கச் சொன்னாள்.
அந்தச் சிறுமி அரிசிப்பானையைப் பார்த்துவிட்டு, “இன்னும் இரண்டு மூன்று நாளைக்குச் சமைக்கலாம் அம்மா…” என்று சொன்னாள்.
உடனே அந்த இளம் விதவை, பணக்காரன் அனுப்பிய வேலைக்காரர்களிடம் சொன்னாள்.
“எங்களுக்கு மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு இருக்கிறது. இப்போதைக்கு இது போதும்... எங்களுக்குத் தேவைப்பட்டால் நாங்களே அங்கு வந்து கேட்கிறோம்...” என்று சொல்லி பணக்காரன் அனுப்பிய உணவு, தானியங்களைத் திருப்பி அனுப்பி விட்டாள்.
தான் அனுப்பிய உணவு, தானியங்களை இளம் விதவை திருப்பி அனுப்பி விட்டதை நினைத்து வருந்திய பணக்காரன் அந்த யோகியைச் சந்தித்து, விசயத்தைச் சொன்னான்.
அதனைக் கேட்ட யோகி, “செல்வந்தனே, தினசரி வருமானத்திற்குக் கூலி வேலை செய்யும் அந்தப் பெண்ணுகுச் சம்பாதித்துத் தரக் கணவன் இல்லை. இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு அவளுக்கு இருக்கிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஒன்றுமே இல்லை என்றாலும், உழைக்கும் உறுதியோடு இருக்கிறார். ஆனால் நீயோ… உன்னுடைய பதினேழாவது தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைக்க முடியவில்லையே என்று கவலைப்படுகிறாய்… இதுதான் உன் நோய். உன்னை நீ மாற்றிக்கொண்டால், உன் நோய் உன்னைவிட்டுப் போய்விடும்” என்றார்.