ஒரு விவசாயி ஒரு ஆட்டுக்குட்டியை வளர்த்து வந்தார்.
அந்த ஆட்டுக்குட்டி ஒரு நாள் அங்கிருந்து தப்பி ஓடியது. போகும் வழியில் அது ஒரு குள்ள நரியைச் சந்தித்தது.
குள்ள நரி ஆட்டுக்குட்டியிடம் “எங்கே போகிறாய்?” என்று கேட்டது.
அதற்கு அந்த ஆட்டுக்குட்டி, “நரியாரே, என்னை ஒரு விவசாயி வளர்த்தான். எனக்கு அங்கு வாழவேப் பிடிக்கவில்லை. அங்கே ஒரு மோசமான ஆடு இருக்கிறது. அது ரொம்பச் சேட்டைகள் செய்யும். அது செய்யும் சேட்டை களுக்கு என்மீது பழிபோடும். அதனால் அந்த வீட்டை விட்டு வெளியேறி விதி விட்ட வழியென்று போய்க் கொண்டிருக்கிறேன்”என்று பதிலளித்தது.
இதைக் கேட்ட நரி, “எனது நிலையும் இதுதான். கழுகோ, பருந்தோ கோழிக் குஞ்சைத் தூக்கிக் கொண்டு போய் விட்டால், எப்போதும் என்மீதே பழி சுமத்துகிறார்கள். அதனால் நாம் இருவரும் ஒன்றாக ஓடி விடுவோம்” என்று கூறியது.
குள்ள நரியும் ஆட்டுக்குட்டியும் இணைந்து சென்றன.
கொஞ்ச தூரம் சென்றதும், அங்கே பசியோடிருந்த ஒரு ஓநாயைச் சந்தித்தன. அந்த ஓநாய் இருவரையும் பார்த்து “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டது.
அதற்கு நரி, “நாங்கள் இருவரும் விதிவிட்ட வழியே போகிறோம்”என்றது.
ஓநாய் உடனே “அப்படி என்றால் நாம் மூவருமே ஒன்றாகப் போவோம்” என்றது.
ஆட்டுக்குட்டி, நரி, ஓநாய் மூன்றும் ஒன்றாய் நடந்தன.
ஓநாய் திடீரென ஆட்டுக்குட்டியைப் பார்த்து, “என்ன ஆட்டுக்குட்டியே, நீ எனது கம்பளிக் கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டாய்?” என்று கேட்டது.
உடனே குள்ளநரி குறுக்கிட்டு, “என்ன தம்பி உண்மையிலேயே இது உனது கோட் தானா?” என்று ஓநாயைக் கேட்டது.
ஓநாய் உடனே “உறுதியாக, இது என்னுடைய கம்பளிக்கோட்டுதான்” என்றது.
“அப்படியானால் உன் கோட்டை எடுத்து கொள்வதுதான் நியாயம்” என்று குள்ள நரி கூறியது.
ஆட்டுக்குட்டி பயத்தில் இல்லை என்று கத்தியது.
உடனே ஓநாய் அந்த ஆட்டுக்குட்டி யைக் கொன்று, அதன் தோலை உரித்து எடுத்துவிட்டுத் திண்ண ஆரம்பித்தது.
குள்ள நரிக்கும் பங்கு கிடைத்தது.