அரசர் அரியணையில் அமர்ந்திருந்தார்.
அவர் அமைச்சர்களைப் பார்த்து, "ஒருவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாகப் புறம் பேசுவது கெட்ட பழக்கம். இந்தப் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. அவர்களுக்கு என்ன தண்டனை தரலாம்? சொல்லுங்கள்!'' என்று கேட்டார்.
அதற்கு அமைச்சர் ஒருவர், "கோள் சொல்பவர்கள் கொடியவர்கள். ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றிக் குறை சொல்வது எல்லாரும் இயல்பாகச் செய்வது. அதை அப்படியே எடுத்துச் சென்று அவரிடம் சொல்வது கெட்ட பழக்கம். இதனால், குறை சொன்னவரும், சொல்லப்பட்டவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர்; பகைவர்கள் ஆகின்றனர். கோள் சொல்பவர்களால் குழப்பம் ஏற்படுகிறது. இவர்களுக்குக் கொடிய தண்டனை வழங்க வேண்டும்!'' என்றார்.
"கடுமையான தண்டனை தந்தால்தான் கோள் சொல்பவர்கள் திருந்துவர். நாடும் வளம் பெறும்'' என்றார் இன்னொரு அமைச்சர்.
"கோள் சொல்பவனின் நாவை அறுத்து ஊமையாக்கி விட வேண்டும். இதைப் பார்க்கும் பிறரும் கோள் சொல்ல எவரும் அஞ்சுவர்!'' என்றார் மற்றொரு அமைச்சர்.
அமைதியாக இருந்த முதலமைச்சரைப் பார்த்தார் அரசர். "கோள் சொல்பவனுக்கு என்ன தண்டனை தரலாம்? நீங்கள் சொல்லுங்கள்!'' என்று அவரைக் கேட்டார்.
"அரசே! ஒரு குற்றம் நடப்பதற்கு யார் துண்டுகிறாரோ அவரும் குற்றவாளிதான். ஆர்வத்துடன் கேட்பவர் இல்லாவிட்டால், யாரும் கோள் சொல்ல மாட்டார்கள். அதனால், கோள் மொழியைக் கேட்பவர்கள் காதுகளையும் அறுத்துவிட வேண்டும்!''
அப்படியே சட்டம் இயற்றப்பட்டது.
கோள் சொன்னால் நாவு போய்விடுமே என்று கோள் சொல்பவர்களும், கோள் சொல்வதை கேட்டால் நம்ப காது போய்விடுமே என கோள் கேட்டவர்களும் பயந்துபோய் ஓடினர்.
அதனால் இந்த கெட்ட பழக்கமே அந்த நாட்டை விட்டு ஓடியது.