ஒரு நாள் பாண்டவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது ஏழை ஒருவன் வந்து தருமரிடம் ‘ஐயா நான் வறுமையில் வாடுகிறேன், ஏதாவது உதவி செய்யுங்கள்’என்றான்.
உடனே தருமர் தனது இடது கையால் பக்கத்திலிருந்த வெள்ளிக்கிண்ணத்தை எடுத்துத் தானமாகக் கொடுத்தார்.
ஏழை வாங்கிச் சென்றதும் பீமன் ‘அண்ணா இடது கையால் செய்வது பாவமாயிற்றே. தர்மபலனும் இல்லையே. எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த நீங்கள் இப்படிச் செய்யலாமா?’ என்று கேட்டார்.
“தம்பி, ஏழையின் துயரைக் கேட்டதும் மனமிளகி அவனுக்கு வெள்ளிக் கிண்ணத்தை கொடுக்கும் எண்ணம் ஏற்பட்டது. நான் சாப்பிட்டுக் கைகழுவி வந்த பின்பு தரலாம் என்றால் அதற்குள் இந்தப் பொல்லாத மனம் எப்படி மாறிவிடுமோ? ஒரு வேளை வேறு ஏதாவது பொருளைக் கொடுத்தால் போதாதா? வெள்ளிக்கிண்ணம் எதற்கு?” என்று தோன்றலாம். எனவே நல்லதைச் செய்ய நினைக்கும்போது அந்த நொடியிலேயே செய்வது நல்லது. அதனால் நமக்கு ஏற்படும் நன்மை, தீமையைவிடப் பிறருக்கு ஏற்படும் நன்மையே முக்கியம்” என்றார் தருமர்.