ஈசாப், ஒரு கிரேக்க மன்னனின் அடிமையாக இருந்தார்.
குழந்தைகளுடன் விளையாடுவதில் ஈசாப்புக்கு அபார விருப்பம்.
ஒரு நாள் அவர் குழந்தைகளுடன் வில்அம்பு வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது பக்கம் வந்த கறார் பேர்வழியான ஒரு பண்டிதர் ஈசாப்பை பார்த்து, ‘ஏனப்பா இப்படிக் குழந்தைகளுடன் விளையாடி உன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறாய்? இதனால் உனக்கு என்ன பயன்?’ என்று கேட்டார்.
அதற்கு ஈசாப், நாண் ஏற்றப்பட்டிருந்த ஒரு வில்லை எடுத்து, அதன் நாணை அவிழ்த்து, வில்லை தரையில் வைத்துவிட்டு, ‘இதுதான் என் நோக்கம்’ என்று சொன்னார்.
அதற்கு அந்த பண்டிதர், ‘உன் பதில் எனக்குப் புரியவில்லையே?’ என்றார்.
உடனே ஈசாப், ‘ஒரு வில்லை எப்போதுமே நாணேற்றி வைத்திருந்தால், சில நாட்களில் அந்த வில்லின் வலிமையும், தீவிரமும் குறைந்து போய், அது எதற்கும் பயன்படாத வில்லாகிவிடும். எனவே அதன் வலிமையையும், தீவிரத்தையும் தக்கவைத்துக் கொள்ள அவ்வப்போது வில்லின் நாணைக் கழற்றி வைக்க வேண்டும். அப்போது அது நமக்குத் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தத் தயாராக இருக்கும்!’ அதுபோலத்தான் இதுவும்’ என்றார்