கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். கிருஷ்ண பரமாத்மாவை ஏன் இப்படி அழைக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா?
கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்தப் பகுதி மக்களுக்குப் பெரும் துன்பத்தைக் கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால் கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள். அந்தப் பகுதி மக்கள், அசுரன் முரனிடமிருந்து தங்களைக் காக்க வேண்டி இறைவன் விஷ்ணுவை வழிபட்டு வந்தனர்.
ஒருநாள் ஒரு மூதாட்டியின் வீட்டுக் கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது. அதைக் கேட்ட அந்த வீட்டிலிருந்த மூதாட்டி, தன்னைக் கொல்ல அசுரன் முரன் வந்துவிட்டானோ என்று பயந்தபடிக் கதவைத் திறந்தாள்.
வாசலில் ஒரு சிறுவன் நிற்பதைக் கண்டாள். அந்தச் சிறுவன் கறுப்பாக இருந்தாலும் அழகாக இருந்தான். அவனைப் பார்த்தவுடன் அந்த மூதாட்டிக்குப் பயம் நீங்கியது. “நீ யாரப்பா. எங்கிருந்து வருகிறாய்?“ என்று கேட்டாள்.
“பாட்டி, நான் யார் எங்கிருந்து வருகிறேன் என்பதைப் பிறகு சொல்கிறேன், எனக்குப் பசியாக இருக்கிறது, ஏதாவது உணவு தாருங்கள்” என்று கேட்டான் அந்தச் சிறுவன்.
அவனை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து, அரிசிக் கஞ்சியைக் கொண்டு வந்து அந்தச் சிறுவனிடம் கொடுத்து, “அப்பா... நான் ஒரு ஏழைக் கிழவி. உனக்கு ருசியாகச் சாப்பிட கொடுக்க என் வீட்டில் எதுவும் இல்லை. இந்த ஏழைப் பாட்டியால் இந்த அரிசிக் கஞ்சியைதான் தர முடிந்தது” என்று சொல்லித் தந்தாள்.
அதை வாங்கிச் சாப்பிட்ட சிறுவன், “பாட்டி... நீ எனக்கு அன்பாகக் கொடுத்த அரிசி கஞ்சி அமுதமாக இருந்தது. அன்புள்ளம் கொண்ட நீ ஏழை இல்லை. நீ கொடுத்த இந்த அரிசி கஞ்சிக்கு நான் உனக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும். என்ன உதவி வேண்டும் கேள்” என்று கேட்டான்.
அந்தச் சிறுவன் பேசியதைக் கேட்டு சிரித்த பாட்டி, “சுட்டிப் பயலே. சிறுவனான நீ, எனக்கு என்ன உதவி செய்துவிடுவாய்.?” என்றாள்.
“என் அம்மாவும் என்னைச் சுட்டிப்பயல் என்றுதான் சொல்வாள். இந்தச் சுட்டி பயலுக்கு எல்லோரும் சின்ன வேலையாகத் தருகிறார்கள். நீயாவது பெரிய வேலையைத் தா” என்றான் சிறுவன்.
“நீ என் பேரனைப் போல இருக்கிறாய். இந்த ஊரில் முரன் என்ற அசுரன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ படாமல் இருந்தாலே போதும். நேரம் இருட்டிவிட்டது. இங்கேயே தூங்கிவிட்டு காலையில் பத்திரமாக வீடு போய் சேர்” என்றாள் பாட்டி.
“பாட்டி, எனக்கு வீட்டுக்குள்ளேப் படுத்தால் தூக்கம் வராது. நான், இந்த வீட்டுக்கு வெளியிலிருக்கும் திண்ணையில் படுத்துக் கொள்கிறேன். விடிந்ததும் இங்கிருந்து சென்று விடுகிறேன்.” என்றான் அந்தச் சிறுவன்.
பாட்டியும் சரி என்றாள். அவனும் திண்ணையில் படுத்துக் கொண்டான்.
மறுநாள் பொழுது விடிந்தது. அப்போது, அந்த ஊரையே அதிர வைக்கும்படியாகப் பலத்த சத்தம் எழுந்தது.
அந்த ஊர் மக்கள், என்ன ஏது என்று தெரியாமல் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். அந்த வீட்டிலிருந்த பாட்டியும் உள்ளேயிருந்து வெளியில் வந்து பார்த்தாள்.
அங்கு, அசுரன் முரன் இறந்து கிடந்தான்.
“யார் இந்த அசுரனை கொன்றது?” என்று ஒருவரையோருவர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
பாட்டி திண்ணையைப் பார்த்தாள். அந்தச் சிறுவன் இல்லை. நேற்றிரவு வந்தது கண்ணன்தான் என்பதைத் தெரிந்து கொண்டாள்.
“இந்த அசுரனின் தொல்லையில் இருந்து காப்பாற்றத் தினமும் நாம் வேண்டிய இறைவனே சிறுவன் வடிவில் இங்கு வந்திருக்கிறார்” என்றாள் அந்தப் பாட்டி.
அவ்வூர் மக்கள் அனைவரும் இறைவனை நன்றியுடன் வணங்கினார்கள்.
முரன் என்ற அசுரனைக் கொன்றதால் இறைவன் விஷ்ணுவுக்கு “முராரி” என்ற பெயரும் ஏற்பட்டது.