பிருந்தாவன கோபியர் சிலர் மோர், தயிர், வெண்ணெய் விற்க ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்றனர்.
மாலை வீடு திரும்பும் போது வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இரவு நேரமோகி விட்டது.
சுற்றுமுற்றும் பார்த்த கோபியர், வியாசர் தவத்தில் இருந்ததைப் பார்த்து, முனிவரான அவர் தங்களுக்கு உதவக்கூடும் என்று அவரிடம் அபயம் கேட்டனர்.
அவரும் அவர்களிடம் மீதமுள்ள மோர், தயிர், வெண்ணெய் வேண்டுமென நிபந்தனை இட்டார்.
மழை காரணமாக விற்காத அனைத்தையும் கோபியர்கள் அவரிடம் கொடுத்தார்கள்.
அவரும் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டுக் கால் நீட்டிப் படுத்து விட்டார்.
கோபியர் அவரை எழுப்பி, “முனிவரே, எங்களுக்கு உதவுவதாகச் சொன்னீர்களே, எங்கள் வீடுகளில் எங்கள் குழந்தைகள் காத்திருப்பார்கள். தயவுசெய்து உதவுங்கள்" என்று கேட்டனர்.
வியாசரும் நதியின் அருகே சென்று, “யமுனையே, நான் நித்திய உபவாசி என்றால் விலகி வழி விடு" என்றார்.
உடனே யமுனை விலகி வழி விட, முனிவரைப் பின்தொடர்ந்த கோபியர் அக்கரைக்குச் சென்றனர்.
கோபியர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் முனிவரிடம், “முனிவரே, எங்களிடம் இருந்ததெல்லாம் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, நித்திய உபவாசி என்று யமுனையிடம் பொய் சொல்லலாமா? அவளும் உண்மை அறியாமல் வெள்ளம் விலக்கி வழிவிட்டாளே" என்று கேட்டார்கள்.
உடனே வியாசர், ‘உப’ என்றால் ‘அருகில்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் வசிப்பது என்று அர்த்தம். என் மனதார நான் நித்தமும் கண்ணன் அருகிலேயே இருக்கிறேன். அதனால் நான் ‘நித்திய உபவாசி’ " என்றார்.
கண்ணன் அருகில் இருக்கும் அளவுக்கு தவவலிமை உடையவர் வியாசர் என்பதை அறிந்த கோபியர் அவரை வணங்கிச் சென்றனர்.
இந்தக்கதையின் மூலம் உபவாசம் என்பதற்கான மற்றொரு பொருளையும் அறிந்து கொள்ள முடிகிறது.