தாமியா என்ற தொழிலதிபர் நிறைய பணம் முதலீடு செய்து பருத்தி வியாபாரத்தில் இறங்கிப் பெரும் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் ஷீரடிக்கு வந்து மசூதியில் இருந்த பாபாவைத் தரிசிக்கச் சென்றார்.
“தாமியா ஆகாயத்தை எட்டிப் பிடிக்க முயலுகிறாய். அது மண் கோட்டையைப் போன்றது. பஞ்சுடன் பணம் எனும் நெருப்பைச் சேர்த்து காசைக் கரியாக்காதே” என்றார் பாபா.
“தாம் செய்யப் போகும் தொழிலை சூசகமாக சொல்லிவிட்டாரே பாபா’ என்று எண்ணினார் தாமியா.
“ஞான தீபமே! நான் செய்ய எண்ணிய வியாபாரத்தில் வரும் லாபம் அனைத்தையும் மசூதியின் மேம்பாட்டிற்கு உதவுகிறேன்”
“தாமியா உன் அனபுக்கு மிக்க நன்றி. நான் விரும்புவது பணமல்ல. பண்பட்ட உள்ளம்தான்” என்று பாபா சொன்னபோது தமது தவறை உணர்ந்து தலைகுனிந்தார், தாமியா.
பாபா அவரைத் தடுத்ததற்கான காணரத்தை தாமியா பின்னர் அறிய நேர்ந்தது.
தாமியா செய்ய இருந்த பருத்தி வியாபாரத்தை அவரது கூட்டாளி செய்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டு, நஷ்டம் தாங்க முடியாது தற்கொலை செய்து கொண்டார்.
தன்னை மிகப் பெரிய அழிவிலிருந்து காப்பாற்றிய பாபாவைப் பார்த்து தாமியா கேட்டார்.
‘பாபா’ என்னைப் போல் எல்லோர் குறையும் கேட்டு, தாங்கள் அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றிப் பயனடையச் செய்திருக்கிறீர்களா?”
“தாமியா, அதோ பார் மாமரத்தை. அதில் எவ்வளவு பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் அப்பூக்கள் யாவும் பழங்களாகிவிட்டால் எவ்வளவு பெரிய விளைச்சலாகும். ஆனால் அது நடப்பதில்லையே. காற்றிலும், மழையிலும் உதிர்ந்து போய் சில மட்டும்தான் காயாகி கனியாகின்றது. அதுபோல்தான் அவரவர் விதியின் பயனாய் நிகழ்கிறது” என்று தெளிவுப்படுத்தினார்.