கிருஷ்ணதேவராயர் அரசவைக்கு ஒரு பன்மொழிப் புலவர் வந்தார்.
அவர், “உங்கள் அரசவையில் யாரேனும் என் தாய்மொழியைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?” என்று அங்கிருந்த அனைவருக்கும் சவால் விட்டார்.
இராயர் அரசவையிலிருந்த அஷ்டதிக் கஜங்கள் எனப்படும் எட்டு பெரும் புலவர்களும் பல்வேறு மொழிகளில் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அவரும் அவரவர் கேட்ட மொழிகளில் தெளிவாகப் பதிலளித்தார். சப்ததிக் கஜங்கள் தோல்வி கண்டு தலைகுனிந்தனர். இராயர் அரசவையை ஏளனமாகப் பார்த்தார் அப்பன்மொழிப் புலவர்.
“அப்புலவனின் தாய்மொழியை நான் கண்டறிந்து நாளை அரசவையில் தெரிவிக்கிறேன்” என்றான் தெனாலிராமன்.
அரைகுறை நம்பிக்கையோடு ஒப்புக் கொண்ட இராயர் அப்புலவரிடம் ஒரு நாள் அவகாசம் வேண்டுமென்று கேட்டார்.
அன்றிரவு, அப்புலவர் தங்கியிருந்த மாளிகைக்குள் யாரும் அறியாமல் நுழைந்தான் தெனாலிராமன். அப்புலவரது படுக்கை அறையின் ஜன்னலை ஒட்டியிருந்த கையில் தண்ணீர் நிறைந்த ஒரு செம்புடன் ஒரு புதரில் ஒளிந்து கொண்டான். உண்டு களித்து சற்று நேரத்தில் அயர்ந்து உறங்கிப் போனார் அப்புலவர். இதுதான் தக்க தருணம் என உணர்ந்த தெனாலிராமன், கையில் இருந்த செம்பு நீரை ஜன்னல் வழியாக அப்புலவன் மீது ஊற்றினான். திடுக்கென்று விழித்த புலவர், யாரடா அவன்? என் மேல் தண்ணீர் தெளித்தது? என்று அவரது தாய்மொழியில் சொல்லியபடி எழுந்தார்.
வெளியே தலைகாட்டாது வந்த வழியே வெளியேறினான் தெனாலிராமன்.
மறுநாள் காலை அரசவை கூடியது.
தெனாலிராமனைப் பார்த்து, “இராமா! பன்மொழிப் புலவரிடம் நீ கேட்க விரும்பும் கேள்விகளைக் கேட்கலாம்” என்றார் இராயர்.
“அவசியமில்லை அரசே! அப்புலவரது தாய்மொழி இதுதான்” என்று அந்தப் புலவரின் தாய்மொழியின் பெயரைச் சொன்னார்.
பன்மொழிப்புலவர் அதை ஒப்புக் கொள்ளாமல் மறுப்பு தெரிவித்தார்.
அரசர் தெனாலிராமனிடம், “புலவரின் தாய்மொழி அதுதான் என்று எப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டார்.
தெனாலிராமனும் முதல்நாள் இரவு நடந்ததைக் கூறினான்.
புலவரைப் பார்த்தார் இராயர். வேறு வழியில்லாமல் புலவரும் அதை ஒப்புக் கொண்டார்.
“அரசே! ஒருவன் விழிப்பு நிலையில் நூறு மொழிகளில் தங்கு தடையின்றி உரையாடினாலும், அவனது கனவு நிலையில் தாய்மொழியே உடனிருக்கும். ஆழ் உறக்க நிலையிலிருந்து விழிக்கும் பொழுதும், அதுவே உடன் வெளிப்படும்” என்றான் தெனாலிராமன்.