ஒரு கூட்டில் புறா ஒன்று வசித்து வந்தது. அந்தப் புறாவுக்கு இரண்டு புறாக் குஞ்சுகள் இருந்தன. இந்த இரண்டும் தனது சிறு வயதினை மகிழ்வோடு கழித்து வந்தன. இவை இரண்டுக்கும் தாய்ப்புறா உணவு கொண்டு வந்து கொடுக்கும்.
நாட்கள் கடந்து சென்றது. இரண்டு புறாக்களும் பருவ வயதினை அடைந்தது.
தன் குஞ்சுகளின் திறமையைப் பரிசோதிக்க நினைத்தத் தாய்ப்புறா, இரண்டு புறாக்களையும் அழைத்து, உங்களுக்கு இரை தேடிச் செல்லும் அளவுக்கு இறகுகள் வளர்ந்துவிட்டன. இனி நீங்கள் தனியாகச் சென்று இரையை தேடிக்கொண்டு வரவேண்டும். நீங்கள் தேடிச் செல்லும் இரகசியத்தை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளக்கூடாது என்றது.
தன் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு புறாக்களும் இரையைத் தேட ஆரம்பித்தன. இரண்டில் ஒரு புறா தேடுவதற்கு முன் சேற்றில் விழுந்து தன்னை அழுக்காக்கி கொண்டபின் இரை தேடச் செல்லும். போதிய அளவு இரை தேடிய பின் ஆற்றில் சேற்றை கழுவிக் கொண்டு இருப்பிடத்திற்கு செல்லும். இதைப் பார்த்த மற்றொரு புறா, நீ அழுக்கோடு என்னுடன் வருவதால் எனக்குக் கேவலமாக இருக்கிறது. உன்னைப் பார்க்கும் மனிதர்கள், உன்னை ஒதுக்கி விடுகின்றார்கள், என்னைப் பார்க்கும் மனிதர்கள் என் அழகை ரசிக்கின்றார்கள். நீ முட்டாளைப் போல நடந்துகொள்ளாதே என தினமும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும்.
இரண்டு வாரங்கள் கழிந்தன. தாய்புறா தனது இரண்டு குஞ்சுகளையும் அழைத்து சோதனை செய்தது. அதில் ஒரு புறா நன்றாக கொழுத்துப்போய் இருந்தது. மற்றொரு புறா எலும்பும் தோலுமாய் இருந்தது.
உடனே தாய்ப்புறா, கொழுத்துப் போய் இருந்த புறாவை அழைத்து, நீ இவ்வளவு கொழுத்துப்போய் நன்றாக இருக்கின்றாய். ஆனால் உனது சகோதரன் மட்டும் ஏன் இப்படி எலும்பும் தோலுமாய் இருக்கிறான் எனக் கேட்டது.
அதற்கு அந்த புறா, அம்மா! நான் தினமும் காலையில் இரை தேடுவதற்கு முன்பு, சேற்றில் குளித்துக் கொண்டு இரைதேடச் செல்வேன். நான் அழுக்காக இருப்பதால் மனிதர்கள் யாரும் என்னை கண்டு கொள்ளமாட்டார்கள். நான் விரும்பியவாறு விரும்பிய இடத்தில் எனது வயிறு நிறைய இரைகளை பெற்றுக்கொள்வேன். ஆனால், அண்ணன் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் அவனால் நிம்மதியாக இரை தேட முடிவதில்லை. மனிதர்கள் அவனது அழகைக் கண்டு, அவனைப் பிடிப்பதற்குத் துரத்துகின்றார்கள். அதனால், அவன் அதிக இரை தேட முடிவதில்லை. குறை வயிற்றோடு தினமும் இருப்பிடத்திற்குத் திரும்பி விடுவான். இதனால்தான் அவன் பசியால் மெலிந்து போய் உள்ளான் எனக் கூறியது.
இதைக் கேட்டத் தாய்ப்புறா, தன் குஞ்சின் புத்திக்கூர்மையினை நினைத்து மெய்சிலிர்த்தது. மற்றொரு புறாவை அழைத்து, உனது தம்பி இரை தேடப் புத்திக்கூர்மையை பயன்படுத்தி இருக்கிறான். அதனால், இனி நீ உன் தம்பி எவ்வாறு நடந்துகொள்கின்றானோ அவ்வாறே நீயும் நடந்துகொள். அது உன்னையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும். நீயும் குறைவில்லாமல் இரை தேடலாம் என அறிவுரை கூறியது.