சிவபக்தியுடைய ஒரு பெரியவர் காசிக்கு சென்றார். பய பக்தியுடன் காசி விசுவநாதப் பெருமானை வழிபட்டார். பல நாட்கள் காசியில் தங்கியிருந்து விட்டு ஊருக்கு திரும்பும் நாளில் கங்கையாற்றின் கங்கா தீர்த்தம் ஒரு குடத்தில் எடுத்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தார்.
இப்புனித நீரை இராமேஸ்வரத்திலுள்ள இராமநாதப் பெருமானுக்கு அபிசேகம் செய்ய வேண்டுமென்று நினைத்து, அதனைப் பூசை அறையில் வைத்துப் பாதுகாத்து வந்தார்.
காசிக்கு போய் வந்ததன் நினைவாக, இனி பொய் சொல்வதி்ல்லை, சிவனுக்கு ஒவ்வாத உணவுகள் உண்பதில்லை என முடிவெடுத்தார்.
இராமேஸ்வரம் செல்லச் சில காலம் ஆயிற்று.
இதற்கிடையில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் வந்தது. குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை.
கோடைக்காலம், உச்சி வெயில் நேரம்.
அக்கால நேரத்தில் ஒரு கழுதை தாகத்தின் மிகுதியால் உயிர் போகும் நிலையில் படுத்துக் கிடந்தது.
அதைப் பார்த்த அந்தப் பக்தரின் மகன், தன் தந்தையார் வைத்திருந்த கங்கை நீரை எடுத்து இறக்கும் நிலையில் இருந்த கழுதைக்கு வைத்துக் குடிக்கச் செய்தார்.
இதை அறிந்த பெரியவர் மிகவும் வருத்தப்பட்டார். மகனைத் திட்டினார்.
அவருக்கு அதை நினைத்து இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.
நள்ளிரவில் சிறிது கண் அயர்ந்தார். இராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கும் இராமநாதப் பெருமான் அவரது கனவில் தோன்றி, “நீ எனக்கு ஆயிரம் குடம் கங்கை நீரை அபிசேகம் செய்த புண்ணியம் பெற்றாய். உன் மகன் தாகமுற்றிருந்த கழுதைக்குக் கங்கை நீரை அளித்தது மூலம், என்னை வந்து சேர்ந்தது” என்று கூறி மறைந்தார்.
பிற உயிர்களைப் புறக்கணித்தல் கூடாது. இறைப்பணி மட்டும் பக்தி ஆகாது. பிற உயிர்களுக்குத் தக்க சமயத்தில் உதவும் பணியும் இறைப்பணியாகும். ஈகை, இரக்ககுணம், உண்மை, நேர்மை இருந்து பிற உயிர்களிடம் இரக்கம் கொண்டு உதவுதலும் இறைவர் வேண்டும் பக்தி நெறியாகும்.