ஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அந்தப் புலவர் மிகவும் பண்புள்ளவராகவும், திறமை மிகுந்தவராகவும் இருந்ததால் பல நண்பர்கள் அவரைப் பார்க்க வருவார்கள்.
ஒரு முறை புலவர் நோய்வாய்ப்பட்டார். படுக்கையில் இருந்த அவரைப் பார்க்கத் தினமும் அவரது நண்பர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
புலவரின் மகளுக்கு வந்தவர்களை உபசரித்துச் சலித்துவிட்டது. எனவே அவள் அனைவரிடமும் சற்று அலட்சியமாகவே நடந்து கொண்டாள்.
ஒருநாள் அடுத்த கிராமத்திலிருந்து ஒரு புலவர் தன் நண்பரைப் பார்க்க வந்தார். சிறிது நேரம் இருவரும் அன்புடன் பேசிக்கொண்டிருந்தனர். படுத்திருக்கும் புலவர் நண்பனை உபசரிக்க எண்ணியபடி தன் மகளை அழைத்து, "அம்மா, இவருக்குப் பருகப் பால் கொண்டு வா" என்று கூறினார்.
அவள்தான் அலட்சியமாக இருப்பவளாயிற்றே. அவளும் பாலை ஒரு குவளையில் கொணர்ந்து கொடுத்தாள்.
அந்தக் காலத்தில் பாலை ஆடை நீக்குவதற்காகத் துணி வைத்திருப்பார்கள். அந்தத் துணியை ஒவ்வொருமுறை வடிகட்டிய பின் துவைத்து உலர்த்தியிருப்பார்கள். ஆனால் அந்தப் பெண் துணியை அப்படியே வைத்திருந்து உபயோகப்படுத்தினாள்.
அதனால் பாலைக் குடித்த புலவர் சற்றே முகம் சுளித்தார்.
"ஏன் புலவரே, பால் என்ன கசக்கிறதா?" என்றாள் அந்தப்பெண்.
உடனே புலவர் புன்னகை மாறாமல், "இல்லையம்மா, பாலும் கசக்கவில்லை. துணியும் கசக்கவில்லை."என்றார்.
தான் செய்த தவறை சிலேடையாகச் சொன்ன புலவர் முன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மனம் திருந்தினாள் புலவரின் மகள்.
பெரியோரை அலட்சியப்படுத்தினாலும் அவர்கள் அதை நாகரீகமாக வெளிப்படுத்துவார்கள்.