ஒவ்வொருநாளும் ஆற்றங்கரை ஓரத்துக்கு வருகின்ற பசுக்கன்று ஒன்று தனது நண்பனான கழுதையுடன் சேர்ந்து சுற்றித் திரிவது வழக்கம்.
சற்று தொலைவிலுள்ள கோயிலிலே இருக்கின்ற தாய்ப்பசு தன் கன்று கழுதையுடன் சுற்றித் திரிவதைக் கவனித்துவிட்டு ஒருநாள் தன் கன்றிடம் வந்து, “மகனே! நீ ஏன் கழுதையோடு சுற்றித்திரிகிறாய்? என்னுடன் கோவிலில் இருந்தால் ‘கோவில் பசு’ என்று எல்லோரும் மரியாதையாக உன்னை வணங்குவார்கள். அதுமட்டுமல்லாமல் நேரம் தவறாமல் உணவும் போடுகிறார்கள். நீ இங்கிருப்பதனால் கழுதை சாப்பிடுவது போன்று கடதாசி தானே சாப்பிடவேண்டும்” என்று கூறி அழைத்தது.
“நீ உனது வேலையைப் பார்த்துவிட்டு வந்தவழியே போய்விடு” என்று கடிந்து கொண்டது கழுதையுடன் கூட்டுச்சேர்ந்த பசுக்கன்று.
தாய்ப் பசுவும் கோவிலுக்குத் திரும்பிப் போய்விட்டது. நாட்கள் கடந்தோடின. ஒருநாள் வழக்கத்துக்கு மாறாகத் துணிப்பொதிகள் அதிகமாக இருந்ததால் கழுதையின் எஜமானரான சலவைத் தொழிலாளி, பொதிகளை இந்தப் பசுவின் முதுகிலும் ஏற்றி, வீட்டுக்கு விரட்டிச் சென்றார்.
தெருவழியே போய்க் கொண்டிருந்தபோது, பாரம் தூக்கி பழக்கமில்லாத பசுக்கன்று தள்ளாடியபடி நடந்து சென்று தெருவின் நடுப்பகுதிக்கு வந்தபோது, வேகமாக வந்த மோட்டார் வாகனம் பசுக்கன்று மேல் மோதிச் சென்றது.
பசுக்கன்று கீழே விழுந்தது.
“ஒன்றுக்குமே உதவாத நீயெல்லாம் எதற்காகக் கழுதையுடன் சுற்றுகிறாய்”? என்று பசுக்கன்றைக் கடிந்துகொண்ட சலவைத் தொழிலாளி, பசுக்கன்றைத் தனது காலால் தெருவின் ஓரத்தில் தள்ளிவிட்டு, கீழே கிடந்த துணிப்பொதிகளை எடுத்துக்கொண்டு கழுதையை அழைத்துச் சென்றார்.
பொழுது சாய்ந்தது.
தெரு வழியே வந்த சுவாமி ஊர்வலத்தில் தாய்ப்பசு பட்டு பீதாம்பரங்களுடன் சுவாமிக்கு முன்னால் பக்தர்களால் அழைத்துச் செல்லப்படுவதைப் பார்த்த கன்று “அம்மா, அம்மா” என்று கத்தியது. பக்தர்களின் ஆரவாரமும், தவில் நாதஸ்வர இசையும் சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்ததால் கன்றின் கதறல் தாய்ப்பசுவுக்குக் கேட்கவேயில்லை.
ஆனால் தலையைத் திருப்பிப் பார்த்த பசு கன்றைக் கண்டு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வந்தது. தன்னுடன் கன்றை அழைத்துச் சென்றது.
அதுதான் தாயன்பு.