காய்ந்து போன இலை ஒன்றும், ஒரு மண்ணாங்கட்டியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனவாம்.
ஒரு நாள் இவை இரண்டும் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தன. "நாம் இப்படியே இருந்துக்கிட்டு இருக்கோமே! போற வழிக்குப் புண்ணியம் தேடிக்க வேண்டாமா...?” ன்னு கேட்டது இலை.
“தேடிக்க வேண்டியதுதான் ! அதற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்டது மண்ணாங்கட்டி.
“வேற என்ன செய்வது? மனிதர்கள் புண்ணியம் தேடிக்கிறதுக்குக் காசிக்குப் போறாங்க! அதே மாதிரி நாமும் காசி யாத்திரை போக வேண்டியதுதான்” என்று சொன்னது இலை.
“சரி புறப்படுவோம். ஆனா நீயோ இலை! நானோ மண்ணாங்கட்டி! நாம இரண்டு பேரும் காசிக்குப் போகும் போது… வழியிலேப் பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்றது மண்ணாங்கட்டி.
“நீ சொல்வதும் சரிதான்” என்று இலையும் ஆமோதித்தது.
“காசிக்குப் பயணம் போகுற வழியிலே, ஏதாவது இடையூறு வந்தால் இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் உதவியா இருந்து கொள்ளலாம்” என்று முடிவு செய்து இருவரும் காசி நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர்.
சில நாட்கள் இருவருக்கும் எந்தப் பிரச்சனையுமில்லை.
ஒரு நாள் கடுமையான காற்று வீசத் தொடங்கியது. இலைக்குப் பயம் வந்தது.
அருகிலிருந்த மண்ணாங்கட்டி, அந்த இலை மேலே ஏறி உட்காரந்து கொண்டது.
அதனால் அந்த இலையைக் காற்று அடித்துக் கொண்டு போக முடியவில்லை. மண்ணாங்கட்டி இலையைக் காப்பாற்றி விட்டது.
காற்று வீசுவது நின்றது. ஆனால் மழை பெய்யத் தொடங்கியது.
உடனே இலை மண்ணாங்கட்டி மேலே ஏறி அமர்ந்து கொண்டது. மண்ணாங்கட்டி மேலே இலை குடையாக மூடிக் கொண்டதால், மழைத்துளியில் மண்ணாங்கட்டிக் கரைந்து விடாமல் தப்பியது.
இதனால் இரண்டுக்கும் மிகவும் மகிழ்ச்சி.
“நாம் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு ஒத்தாசையா இருக்கிறோம்!” என்று இரண்டும் பேசிக் கொண்டன.
பின்னர் அவையிரண்டும் மிக உற்சாகமாகக் காசிப் பயணத்தைத் தொடர்ந்தன.
அடுத்த நாள் காற்றும் மழையும் சேர்ந்து அடித்தது. இலை பறந்து போனது. மண்ணாங்கட்டி கரைந்து போனது.
காற்றில் பறந்து போன இலை ஒரு கற்குவியல் மேல் விழுந்தது. அங்கே இருந்த ஒரு கருங்கல்லிடம் இலை தன்னுடைய நிலையைச் சொல்லிப் புலம்பியது.
“மண்ணாங்கட்டிக் கரைஞ்சு போச்சு, நான் என்ன செய்யறது” என்று வருந்தியது.
அதற்கு அந்தக் கருங்கல், “உங்க நட்பு சரிதான். ஆனால், காசிக்குப் போகணும்ங்கற உன்னோட குறிக்கோள் நிறைவேற… என்னை மாதிரி ஒரு கருங்கல்லை நண்பனாகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்” என்றது.
நம்முடைய எண்ணத்தைச் செயலாக்கத் தகுந்த நட்பைப் பெற்றுச் செயல்பட வேண்டும்.