கிராமத்தில் குரங்கொன்று இருந்தது.
ஒரு நாள் அது மரத்தில் ஒடி விளையாடியபோது, உயரமாக இருந்த கிளையிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தது.
அதனால் எழுந்து நடக்க முடியவில்லை. உணவு தேடவும் வழியில்லை. மரத்தின் அடியிலேயேப் படுத்துக் கிடந்தது.
அம்மரத்தின் அருகில் ஒரு சிறு குடிசையில் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் அந்தக் குரங்கைப் பார்த்து மனம் வருந்தி, அதைத் தன் குடிசைக்கு எடுத்து சென்று அடிபட்ட காலுக்கு மருந்திட்டு, உண்ண உணவும் கொடுத்தான்.
நாளடைவில் குரங்கு குணமானது.
அப்போதுதான் அந்தக் குரங்கு குடிசையை நன்கு பார்த்தது. குடிசையின் உச்சியில் ஒரு பெரிய ஓட்டை இருந்தது. அதன் வழியே வெய்யிலும், மழை என்றால் மழை நீரும் குடிசைக்குள் விழும் என்பதும் அதற்குத் தெரிந்தது.
குரங்கு உடனே வெளியே வந்து, மரத்தில் ஏறி, இலைகளையும் சிறு கிளைகளையும் எடுத்து வந்து, குடிசையின் உச்சிக்கு சென்று ஓட்டையை அடைத்தது.
இப்போது குடிசையில் ஓட்டையும் இல்லை, வெய்யில் மற்றும் மழையின் பாதிப்பும் இல்லை.
அந்தக் குரங்கு, தனக்கு உதவி செய்த அந்த ஏழைக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்ததை நினைத்து மகிழ்ந்தது.