ஒரு நதியின் ஒரு பக்கம் செல்வம் மிகுந்த நகரமும், மறுபக்கம் ஒரு செழிப்பான கிராமமும் இருந்தது.
அந்தக் கிராமத்தில் ஒரு பால்காரன் இருந்தான்.
அவன் தன் பசுக்களிலிருந்து பாலைக் கறந்து, படகின் மூலம் நதியைக் கடந்து, நகரத்திற்குக் சென்று பால் விற்பனை செய்து வந்தான்.
அவனுக்கு எப்படியாவது விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என எண்ணினான்.
எனவே, பாலில் பாதித் தண்ணீரைக் கலந்து விற்கத் தொடங்கினான்.
சிறிது நாளில் அவனது வீட்டில் அவனுக்குத் திருமண ஏற்பாடு நடந்தது.
பால்காரன், நகரத்திற்குச் சென்று, பணத்தை வசூலித்துக் கொண்டு, திருமணத்திற்கான பொருள்கள், நகைகள், துணிமணிகள் வாங்கிக் கொண்டு படகில் ஏறித் தன் கிராமத்திற்கு வந்தான்.
நதியில் பாதி தூரம் வந்த போது, படகு பாறை ஒன்றில் மோதி, அவன் வாங்கி வந்த பொருள்களில் பாதி நதியில் வீழ்ந்து மூழ்கியது.
மீதம் கிடைத்த பொருள்களுடன் அவன் படகை மீட்டுக் கொண்டு கிராமத்திற்குத் திரும்பினான்.
கோவிலுக்குச் சென்று, “இறைவா! எனக்கு ஏன் இப்படி நடந்தது?" என அழுது புலம்பினான்.
அப்போது அவன் முன் தோன்றிய இறைவன், "நீ பாலில் பாதித் தண்ணீரைக் கலந்து, மோசடி செய்து விற்றாய். அந்தத் தண்ணீரின் விலையுள்ள பாதிப் பொருள்கள், அந்த நதியின் தண்ணீரோடு சேர்ந்து போய்விட்டன" என்றார்.
அப்போதுதான் அவன் செய்த தவறு அவனுக்குப் புரிந்தது.