குளத்தில் மீனவர்கள் சிலர் மீன் பிடித்தனர்.
இதைப் பார்த்த பருந்து ஒன்றுக்கு மீன் உண்ண ஆசை எழுந்தது. அருகிலிருந்த மரத்தில் காத்திருந்தது.
மீனவர்கள் குளத்திற்குள் இறங்கியதும் விர்ரென்று கீழிறங்கி பெரிய மீன் ஒன்றை கொத்திச் சென்றது.
இதைக் கண்ட காகம் ஒன்று 'கா கா' என்று கத்திக் கொண்டே பருந்தைத் துரத்த ஆரம்பித்தது.
காகம் துரத்துவதை பருந்து பொருட்படுத்தவில்லை.
கொஞ்ச நேரத்தில் காகங்களின் எண்ணிக்கை அதிகமாகவே, பருந்திற்குப் பயம் வந்து நிலை தடுமாறியது.
எங்கெங்கோ சுற்றியும் காகங்கள் விடுவதாக இல்லை.
வலிமையான பருந்தாக இருந்தாலும் நிறைய காகங்கள் துரத்தும் போது என்ன செய்ய முடியும்? பயத்தில் பருந்துக்குக் கத்த வேண்டும் போலிருந்தது. வாய் விட்டுக் கத்தியது.
வாயிலிருந்த மீன் கீழே விழுந்தது. அதைக் கண்டதும் மீனை எடுக்கக் கீழே விரைந்தது பருந்து.
ஆனால் அதற்கும் முன்னதாக மீனை நோக்கிக் காகங்கள் சென்றன.
பருந்துக்கு இப்போது தான் விஷயம் புரிந்தது.
'ஓ.... இவ்வளவுக்கும் காரணம் மீன் தானா...?' என அறிந்து தப்பித்தோம் பிழைத்தோம் என நிம்மதி அடைந்தது.
ஆசை இருக்கும் வரை துன்பம் துரத்தும்.