பெரிய சாம்ராஜ்யத்தின் மன்னன் யயாதி. அவனுக்கு வயது நுாறாகி விட்டது. மனைவிகள் நுாறு; பிள்ளைகள் நுாறு. இந்நிலையில் வாழ்வில் சுக அனுபவத்தில் அவனுக்குத் திருப்தி வரவில்லை.
அவனது வாழ்வு முடியும் நாள் வரவே, எமன் பூலோகம் வந்தான். வாழ்வு முடிவதை யயாதி விரும்பவில்லை.
''பிரபோ... இன்னும் நுாறாண்டு வாழ ஆசைப் படுகிறேன்'' எனக் கோரிக்கை வைத்தான்.
சற்று யோசித்த எமன், ''சரி... ஆனால் ஒரு நிபந்தனை. உனக்கு மாற்றாக யாராவது என்னுடன் வர வேண்டும்'' என்றான்.
மனைவிகள், பிள்ளைகள், மந்திரிகள், காவலர்கள், பணியாளர்கள் என அனைவரிடமும் மன்றாடினான். யாரும் உயிர் விடத் துணியவில்லை.
எமன் ''ம்... சீக்கிரம். நேரமாகிறது...'' என யயாதியை அவசரப்படுத்தினான்.
யயாதியின் கடைசி மகன் ஒரு வழியாகச் சம்மதித்தான். அவனுக்கோ வயது பதினாறு.
ஆச்சர்யம் தாளாத எமன், ''என்னப்பா... அதற்குள் வாழ்க்கை சலித்து விட்டதா?'' என்றான்.
அவன் மிக அமைதியாக, '' பிரபு... எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் வாழ்வில் திருப்தி வரப் போவதில்லை. நுாறு வயதில் போனால் என்ன... பத்து வயதில் போனால் என்ன... என்றாவது ஒருநாள் போகத்தானேப் போகிறேன். இப்போதே அழைத்துச் செல்லுங்கள்'' என்று சொல்லிப் புறப்பட்டான்.
நுாறு ஆண்டுகளானதும், யயாதின் முன் மீண்டும் வந்தான் எமன். மீண்டும் இதே கதை தான்.
''பிரபோ... இன்னும் வாழும் ஆசை தீரவில்லை. இன்னொரு முறை வாய்ப்பு கொடுங்கள்'' என்றான் யயாதி. எமனும் சம்மதித்தான்.
'இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான்' என்னும் பழமொழி மன்னன் விஷயத்தில் சரியாக இருந்தது.
இப்படியே எமனின் தயவில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தன. ஒரு நாள் என்ன நினைத்தானோத் தெரியவில்லை. எமனை அழைத்தான் யயாதி.
''என்னப்பா... நீயாகவே அழைத்து விட்டாய். முன்கூட்டியே என்னை அழைத்து வாழ்வை நீட்டிக்க எண்ணமா?'' என்றான் எமன்.
''இல்லை... ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும் திருப்தி அடையாத என் மனம், இன்னும் லட்சம் வருடம் வாழ்ந்தாலும் திருப்தி அடையாது. எனவே என் கணக்கை முடித்து விட்டுத் தங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்'' என்றான்.
யயாதி மனம் மாறுவதற்குள் எமலோகம் அழைத்துச் செல்ல இதுவே சரியான சந்தர்ப்பம் என எமனும் சட்டென அவன் கணக்கை முடித்தான்.
கிடைத்ததில் திருப்தி அடையாதவர்கள் வாழ்வில் நிம்மதியின் சன்னதி திறப்பதில்லை!