எலி ஒன்று குட்டி போட்டிருந்தது.
இரவு நேரம். தாய் எலி குட்டி எலியிடம், "இந்தப் பொந்தை விட்டு வெளியே வராதே! நான் வெளியே சென்று, யார் வீட்டிலிருந்தாவது நமக்கான உணவைக் கொண்டு வருகிறேன்" என்று கூறி விட்டுச் சென்றது.
தாய் எலி சென்றதும், குட்டி எலி வெளியே வந்து... வெளியுலகைக் காண ஆசைப்பட்டது.
அது பொந்தை விட்டு வெளியே வந்து, சிறிது தூரம் ஓடியது.
அங்கு இருந்த வீடுகளை எல்லாம் பார்த்து வியந்தது.
அப்போது சற்று பெரிய நாலுகால் பிராணி ஒன்றைப் பார்த்து, அது குட்டி எலியைக் கவ்வ ஓடி வந்தது.
பயந்த குட்டி எலி, படுவேகமாக ஓடி வந்து பொந்திற்குள் நுழைந்தது.
சிறிது நேரம் கழித்து, தாய் எலி வந்ததும், குட்டி எலி, “அம்மா! உன் சொல்லைக் கேட்காமல் நான் வெளியே சென்றேன். அப்போது நாலு கால் பிராணி ஒன்று என்னைக் கவ்வ வந்தது" என்றது.
அதற்கு தாய் எலி, "அந்தப் பிராணியின் பெயர்தான் பூனை. அது நமது எதிரி. அதற்காகத்தான் உன்னை வெளியே வர வேண்டாம் என்றேன். தாயான என் அறிவுரையைக் கேட்காமல், வெளியே சென்றதால் ஆபத்தில் சிக்கிக் கொள்ள இருந்தாய். இனியாகிலும் பெரியவர்கள் சொல்படிக் கேட்டு நடந்து கொள்... நமக்கு எந்த ஆபத்தும் வராது... என அறிந்து கொள்" என்றது.
நாமும், நம்மைப் பெற்றவர்கள், பெரியோர்கள் கூறும் அறிவுரையை மதித்து நடக்க வேண்டும்.