ஒரு காட்டில் சிங்கராஜா ஒன்று இருந்தது. அதற்குத் தன்னுடைய பலத்தின் மீது மிகுந்த பெருமை. தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நினைப்பில், அந்தக் காட்டில் வாழும் சிறிய மிருகங்களை எல்லாம் பாடாய்ப்படுத்தியது.
அதனால் சின்ன மிருகங்கள் எல்லாம் இறைவனிடம் அழுது புலம்பின. உடனே இறைவன் ஒரு சிறிய கொசுவைக் கொண்டு, அந்தச் சிங்கத்திற்குப் பாடம் புகட்ட விரும்பினார்.
ஒருநாள் சிங்கம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பக்கமாக ஒரு கொசு வந்தது.
முதலில் தன் காதருகே வந்து ரீங்காரமிட்ட கொசுவைப் பற்றிச் சிங்கம் அலட்சியமாக நினைத்தது. திரும்பத் திரும்ப கொசு தொந்தரவு கொடுக்கவே சிங்கத்திற்குக் கோபம் வந்துவிட்டது.
“யாரவன் எனக்குத் தொந்தரவு கொடுப்பது?” என்று உருமிக் கொண்டே கோபத்துடன் சிங்கம் எழுந்தது.
கொசு கலகலவென சிரித்து, “சிங்க ராசாவே என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? நான் தான் கொசு” என்றது.
“நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ. என்னிடம் வந்து ஏன் தொந்தரவு செய்கிறாய்?” என்று சிங்கம் கேட்டது.
“நான் உங்களிடம் சண்டை போட வந்து இருக்கிறேன். முடியுமானால் என்னிடம் சண்டையிட்டு என்னைத் தோல்வியுறச் செய்யுங்கள் பார்க்கலாம்” என அந்தக் கொசு சவால் விட்டது.
“உனக்கு என்ன திமிர்? அற்பக் கொசுவான நீ என்னிடமா சண்டைக்கு வந்திருக்கிறாய்? நான் மூச்சு விட்டால் கூட நீ நிர்மூலமாகி விடுவாயே...” என்று கூறியவாறே சிங்கம் தன் முன்னங்கால்களை அதனிடம் வீசியது.
கொசுவோ மிகவும் சுலபமாகத் தப்பித்து அப்பால் பறந்து சென்றது. கொசு தொலைந்தது என்று எண்ணிக் கொண்டு சிங்கம் நிம்மதியாகப் படுத்தது.
ஆனால், கொசு மறுபடியும் வந்து சிங்கத்திற்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. சிங்கத்திற்குக் கோபம் தாள முடியவில்லை.
ஆகவே, மறுபடியும் கொசுவை விரட்டியது. கண் ணுக்குத் தெரியாத அளவுக்குச் சிறிய உருவமாக இருந்த கொசு மிகவும் எளிதாகச் சிங்கத்தை ஏமாற்றி அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடிந்தது.
நெடுநேரம் சிங்கமும், கொசுவும் போராடின.
அற்பக் கொசுவை சிங்கத்தால் என்ன செய்ய முடியும்? அதை விரட்ட, விரட்ட திரும்பத் திரும்ப வந்து சிங்கத்திற்குத் தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்தது.
கொசுவை ஒன்றும் செய்ய முடியாமல் சிங்கம் சோர்ந்துவிட்டது. ஓய்ந்து போய்க் கீழே படுத்துக் கொண்டது.
கொசு கைகொட்டி ஏளனச் சிரிப்புச் சிரித்தது. “மிருகங்களுக்கே அரசன் என்று சொல்லிக் கொள்ளும் உம்முடைய பலம் என்னிடம் பலிக்கவில்லை பார்த்தீரா? உம்மைவிட நான் பலசாலி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆகவே நான் தான் இந்தக் காட்டிற்கு அரசன்” என்று வெற்றி முழக்கம் இட்டது.
சிங்கம் வெட்கித் தலை குனிந்தது.