தூமகேது என்ற ஒரு அரசன் இருந்தான். அவன் குடிமக்களிடம் அன்பானவனாக இருந்தான்.
அவன் அழகான மண்ஜாடிகளை சேகரித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவன் மொத்தம் இருபது அழகான மண் ஜாடிகளை சேர்த்துப் பத்திரமாக பாதுகாத்து வந்தான். அவன், அந்த மண் ஜாடிகளை மிகவும் நேசித்தான். மண் ஜாடிகளைத் துடைத்துப் பளபளப்பாக வைக்க ஒருவனை நியமித்திருந்தான்.
ஒரு நாள் குணசேகரன் மண் ஜாடிகளை துடைத்துக் கொண்டிருந்த போது, ஒரு ஜாடியை எடுக்கையில் கை தவறிக் கீழே விட்டுவிட்டான்.
மண் ஜாடி உடைந்து போனது. அதனை அறிந்த அரசன் தூமகேது அவனைச் சிறையில் அடைந்தான்.
மண் ஜாடியை உடைத்த குற்றத்திற்காக, குணசேகரனுக்கு மரண தண்டனை அளித்து ஒரு வாரம் கழித்து மரண தண்டனையை நிறைவேற்ற ஆணை இட்டான்.
குணசேகரனுக்கு நடந்ததை அறிந்ததும் அவனுடைய மனைவி செய்வதறியாது பதறிப் போனாள்.
பின் அவ்வூரில் வசித்த அரசனுக்கு நெருக்கமான வைத்தியரிடம் சென்று, நடந்தவைகளைக் கூறித் தன் கணவனைக் காப்பாற்றும்படி வேண்டினாள்.
அந்த வைத்தியரும் அவளது கணவனை அரசத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்தார்.
அரண்மனைக்கு சென்ற வைத்தியர், அரசரிடம், “நான் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் மண் ஜாடிகளைக் காண விரும்புகிறேன்” என்று கூறினார்.
அரசரும் வைத்தியரை மண் ஜாடிகள் வைத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.
மண் ஜாடிகளைக் கண்டதும் வைத்தியர், “நான் அருகில் சென்று இவற்றைத் தொட்டுப் பார்க்கலாமா?” என்று கேட்டார்.
அரசரும் அதற்கு சம்மதித்தார்.
வைத்தியர் மண் ஜாடிகளின் அருகே சென்றதும் மண் ஜாடிகளைக் கீழேத் தள்ளி விட்டார். கீழே விழுந்த மண் ஜாடிகள் உடைந்தன.
நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அரசன் தூமகேது அதிர்ச்சி அடைந்தான்.
வைத்தியரை உடனடியாக கைது செய்யச் சொன்னான்.
வைத்தியர் அரசனிடம், “மண் ஜாடிகள் என்றால், என்றாவது ஒரு நாள் உடைந்துதான் போகும். பத்தொன்பது ஜாடிகளை உடைத்தாலும் என் ஒருவனுடைய உயிர்தான் போகும். இந்த ஜாடிகளை விட்டுவைத்தால் உயிரற்ற ஒவ்வொரு மண் ஜாடிக்கும் ஒவ்வொருவனுடைய உயிர் வீதம் விலைமதிப்பற்ற பத்தொன்பது மனித உயிர்கள் அல்லவா பறிபோகும். அவர்களைக் காப்பாற்றவே இவ்வாறு செய்தேன்” என்று சொன்னார்.
வைத்தியரின் பேச்சைக் கேட்ட அரசன், ‘உயிரற்ற மண் ஜாடிக்காக விலைமதிப்பற்ற உயிர்களை அல்லவாக் கொல்ல நினைத்தேன்’ என்று எண்ணி, தன்னுடைய தவறினை உணர்ந்தான். அந்தப் பணியாளை விடுதலை செய்தான்.
மனித உயிரானது விலைமதிப்பற்றது. எதற்காகவும் யாரும் அதனை அலட்சியப் படுத்த வேண்டாம் என்பதை இந்த மண் ஜாடி கதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.