காட்டுவழியே பயணம் சென்ற குருவும், சீடனும் இரவில் மரத்தடியில் உறங்கினர்.
மறுநாள் காலை உணவுக்காகச் சீடன், பழம் பறிக்கச் சென்றான். குருநாதர் ஆற்றில் நீராடித் தியானத்தில் அமர்ந்தார்.
அப்போது, '' குருவே! சூரியன் மறைவதற்குள் ராஜநாகத்தால் தங்களின் சீடன் இறக்க நேரிடும்; முடிந்தால் உங்களின் தவசக்தியால் காப்பாற்றுங்கள்'' என அசரீரி ஒலித்தது.
பழங்களுடன் சீடன் வர, இருவரும் பசியாறினர்.
சீடனிடம் ஏதும் பேச மனமின்றி பயணத்தை தொடர்ந்தார் குருநாதர்.
வெயில் அதிகமாக இருந்ததால் ஒரு மரநிழலில் அமர்ந்த சீடன், களைப்பால் சற்று கண் அயர்ந்தான்.
சீடனைக் காப்பாற்ற வேண்டுமே என்ற சிந்தனையில் இருந்தார் குருநாதர்.
இந்நிலையில் ராஜநாகம் ஒன்று சீடனின் அருகே படமெடுத்து வந்தது.
பாம்பைக் கண்ட குருநாதர், '' ஏ! ராஜநாகமே! நீ என் சீடனைக் கொல்ல வந்திருக்கிறாய் என்பதை அறிவேன். ஆனால் உன்னைத் தடுப்பது என் கடமை" என்றார்.
''குருவே! இவனது கழுத்தில் என் நாவை வைத்து ரத்தம் உறிஞ்சியெடுக்க வேண்டும் என்பது காலதேவனால் எனக்கு இடப்பட்ட கட்டளை! வேதம் கற்ற தாங்களே இப்படித் தடுக்கலாமா'' என நாகம் முறையிட்டது.
''ரத்தத்தை தானே நீ உறிஞ்ச வேண்டும். இதோ இவனது ரத்தத்தை தருகிறேன். நீயும் கடமையாற்றிய நிறைவுடன் புறப்படலாம்'' என்று சொல்லி, கத்தியால் சீடனின் கழுத்தில் ரத்தம் கசியும்படி லேசாகக் கீறினார்.
கண் விழித்த சீடன் நடப்பதை அறிந்தும் சலனமின்றி இருந்தான்.
ரத்தத்தை ராஜநாகத்துக்கு ஊட்டினார் குருநாதர்.
நினைத்தது நிறைவேறியதால் நாகம் சென்றுவிட்டது.
அருகில் கிடந்த மூலிகை கொடியில் சாறு பிழிந்த குருநாதர், சீடனின் கழுத்தில் பற்று போட்டு உறங்கச் சென்றார்.
சிறிது நேரம் கழித்து இருவரும் விழித்தனர். கழுத்தில் பற்று இருப்பது குறித்து சீடன் ஏதும் கேட்கவில்லை.
''குருவே! பயணத்தை தொடரலாமா?'' என்றான் சீடன்.
வியப்புடன் குருநாதர், ''சீடனே! சற்று முன்னர் உன் கழுத்தில் நான் கீறினேனே! உனக்கு தெரியாதா?'' எனக் கேட்டார் குருநாதர்.
''குருவே! என்னருகில் பாம்பு வந்ததையும், அதன் பின் கத்தியுடன் நீங்கள் கழுத்தில் கீறி, அதற்கு ரத்தம் கொடுத்ததையும் நன்கறிவேன். ஆனால் குரு ஸ்தானத்தில் இருக்கும் தங்களால் எனக்குத் தீங்கு நேராது என்ற முழுநம்பிக்கை இருப்பதால் அது குறித்து கேட்கவில்லை'' என்றான்.
அதைக் கேட்ட குருநாதர் சீடனைத் தழுவிக் கொண்டார்.
குருநாதரை நம்பிய சீடன் போல, கடவுளை நாம் நம்பிச் சரணடைந்தால் தீமை கூட நன்மையாகும்.