கடவுள் ஒரு நாள் ஒருவன் முன் திடீரென தோன்றினார்.
ஒரே ஒரு நிமிடம் மட்டும் உன் முன்னால் இருப்பேன். நீ எதை நீட்டினாலும், அதில் தங்கக் காசுகளை நிரப்புவேன். அதற்காக, என் வீட்டு அறை முழுக்க நிரப்பு, பீரோவில் கொட்டு என்றெல்லாம் வரம் கேட்கக் கூடாது. ஏனென்றால், அத்தகைய காசுகளெல்லாம் மாயமாக மறைந்து விடும் என்று கூறினார்.
அந்த மனிதனுக்கோ ஆனந்த அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே புரியவில்லை. அவன் வீடு முழுதும் தேடினான், தங்கக் காசுகளை நிரப்பிப் கொள்வதற்குப் பெரிய சாக்கு ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்தான். சோதனையாக சாக்கு ஒன்று கூடத் தென்படவில்லை. கிடைத்ததெல்லாம் சிறு பைகளாகவே இருந்தன. அதிலும் அவை கிழிந்திருந்தன.
அவன் தேடிக் கொண்டே இருந்தான். கடவுள் சிரித்துக் கொண்டிருந்தார்.
அவருக்குத்தான் மனிதனின் இயல்பு தெரியுமே! ஒரு நிமிடத்தில் கடவுள் மறைந்து போனார்.
வேதனையில் துவண்டு போய் தரையில் உட்கார்ந்தான் அந்த மனிதன்.
அப்போது அசரீரியாகக் கடவுளின் குரல் கேட்டது.
அற்ப மானிடனே... வரம் தந்த உடனேயே கொஞ்சமும் பேராசைப்படாமல் உன் இரு கைகளையும் நீட்டி இருக்கலாமே... சாக்கைத் தேடுகிறேன் என்று நேரத்தைக் கடத்தி, பொன்னான ஒரு வாய்ப்பை இழந்து விட்டாயே என்றார்.
குரலும் மறைந்து போனது.
இதுதான் உண்மை!
எது நமக்குக் கிடைக்க வேண்டும் என்ற நிலை உள்ளதோ, அதைப் பெற்றுக் கொள்வதே அறிவுடைமை.
பேராசைப்பட்டால், இருப்பதும் இல்லாமல் போய் பெரும் நஷ்டம் தான் ஏற்படும்.