ஒரு ஊர்லே பெரிய பணக்காரர் இருந்தார். அவர் வீட்டிற்கு பக்கத்தில் சின்ன குடிசை வீடு இருந்தது. அதில் இருக்கும் பெண்மணி பெருமாள் பக்தை, மிகவும் நல்லவள். ஆனால், மிகவும் கஷ்டமான வாழ்க்கை.
இதைப் பார்த்த மகாலட்சுமி பெருமாளிடம், ஏன் இப்படி கேட்டாள். என்னை வணங்கும் பணக்காரன் எவ்வளவு வசதியாக இருக்கிறான் என்று லட்சுமி சொல்ல, பெருமாள் என்ன இருந்து என்ன மிகக் கருமி யாருக்கும் எதுவுமே செய்ய மாட்டான் அவனுக்கு எல்லாம் ஒரு முடிவு காலம் வந்துவிட்டது என்றார்.
லட்சுமி தேவி எப்படி என்று விளக்கம் கேட்டார்.
பெருமாள், “அவன் முன்னோர்கள் செய்த புண்ணியம் இத்தனை நாள் இருந்தது. அதனால், வசதியாக வாழ்ந்தான். இனி அப்படி இருக்கப் போவதில்லை” என்றார்.
லட்சுமி தேவி, “அவனுக்கு ஒரு வாய்ப்பு தந்து பார்க்கலாமே” என்று கேட்க, பெருமாளும் சரி என்று ஒப்புக் கொண்டார்.
லட்சுமிதேவி, வயதான பெண்ணாக மாறி, மிகவும் ஏழைப் பெண்ணாக அந்த வீட்டின் முன் போய் நின்று, “அம்மா” என்று கூப்பிட்டாள்.
அந்த வீட்டின் எஜமானன் தன் வீட்டின் முன் நிற்கும் ஏழைப் பெண்னை பார்த்தவுடன் மிக்க சினத்துடன், “நீ யாரு, எதற்கு இங்கே நிற்கிறாய்?” என்று கேட்டார்.
லட்சுமி தேவி, “ஐயா என் மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். ஏதாவது உதவி செய்யுங்கள்” என்றாள்.
அந்தச் சத்தம் கேட்டு எஜமானனின் மனைவி அங்கே வந்து சேர்ந்தார்.
அவர்களிருவரும், “இங்கு எங்களுக்கேப் பணம் இல்லை, கஷ்டப்படுகிறோம்... உனக்கு எதுவும் கொடுக்க முடியாது. இங்கிருந்து போ” என்று விரட்டி அடித்தார்கள்.
லட்சுமி தேவி, “பூஜை செய்து இருப்பிர் போல இருக்கிறேதே. உங்கள் வீட்டில் இருந்து மணம் வருகிறது. பிரசாதம் ஏதாவது கொடுங்கள், பசிக்கிறது” என்று கேட்டாள்.
எஜமானுக்குக் கோபம் வந்து விட்டது. “நாங்கள் சாப்பிட வேண்டாமா? என் மகன், மருமகள், பேரன், பேத்தி என் குடும்பத்திற்கு வேண்டும். பூஜை செய்வது ஆடம்பரத்திற்காகத்தான்” என்று எஜமானி சொல்ல, “சரி ஒரு புதுப்புடவை தாருங்கள் என் மகளுக்கு” என்று லட்சுமி தேவி கேட்க, “புதுப் புடவையா அதுவெல்லாம் இல்லை, போ” என்று விரட்டி விட்டார்கள்.
லட்சுமி தேவிக்கு மிகவும் கோபம் வந்து, “உன்னிடமிருக்கும் எதுவுமே இல்லாமால் போகட்டும்” என்று சொல்லிவிட்டு, அருகிலிருந்த குடிசை வீட்டுக்குச் சென்றாள்.
அந்தக் குடிசை வீட்டின் முன் நின்று, “அம்மா” என்றாள்.
குடிசையில் இருந்த ஏழை பெண் ஓடி வந்து, “அம்மா, வாருங்கள் திண்ணையில் அமர்ந்து கொள்ளுங்கள். இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவள், மண் குவளையில் மோர் கொண்டு வந்து கொடுத்துச் சாப்பிடுங்கள் என்றாள்.
லட்சுமி தேவி அவளிடம், தன் மகள் திருமணத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டாள்.
தன்னிடம் என்ன இருக்கிறது என்று யோசித்த அந்தப்பெண், தன் மூக்கில் இருந்த மூக்குத்தியைக் கழற்றி கொடுத்தாள்.
பின்னர் வீட்டுக்குச் சென்றவள், வீட்டிலிருந்த புடவையில் ஒரு நல்ல புடவையை எடுத்து வந்து கொடுத்தாள்.
அதனைப் பெற்றுக் கொண்ட லட்சுமி தேவி, “இனிமேல் உனக்கு எந்தக் கஷ்டமும் இருக்காது” என்று வாழ்த்தி விடை பெற்றாள்.
அதன் பிறகு, பணக்காரர் வீடு ஏழ்மையானது. குடிசை வீடு செல்வமுடைய வீடாக மாறியது.
வைகுண்டம் திரும்பிய லட்சுமி தேவியிடம் பெருமாள் சொன்னார்,
“இப்போது புரிகிறதா, அந்த ஏழைப் பெண் முன்னோர்கள் செய்த பாவத்தால், இத்தனை வருடம் கஷ்டப்பட்டாள். அவள் செய்த புண்ணியம், உன் மூலம் செல்வச் செழிப்பை அடைந்தாள். பணக்காரர் முன்னோர் செய்த புண்ணியத்தில் பணவசதியுடன் இருந்தார். ஆனால், உன் கோபத்தால் செல்வத்தை இழந்தார்”