நடுத்தர வயதுக்காரன் ஒருவன், காட்டு மரமொன்றை வெட்டி விறகாக்கிக் கொண்டிருந்தான். மூன்று சுமைகளுக்கான விறகுகள் சேர்ந்திருந்தன. காலையில் இருந்து வெட்டிக்கொண்டிருப்பான் போலும் வியர்த்து விறுவிறுத்திருந்தான். களைத்தும் போயிருந்தான்.
அவன்மேல் இரக்கம் கொண்டு, பெரிய மனிதர் உருவில் அங்கு தோன்றிய இறைவன், ”விறகுவெட்டியே இங்கு வா” என்றார்.
திடுக்கிட்டுத் திரும்பிய அவன், அவரை இந்த வனப்பகுதியின் சொந்தக்காரர் என்று நினைத்துப் பயத்துடன், “அய்யா, என்னை நம்பி, என் வீட்டில், பத்து ஜீவன்கள் இருக்கின்றன. இங்கே இருந்து வெட்டிக் கொண்டு போய் விற்கும் விறகுகளை வைத்துத்தான் என் ஜீவனம் நடக்கிறது. நான் தேக்கு மற்றும் சந்தன மரங்களில் கையை வைக்க மாட்டேன். எரிக்கப் பயன்படும் கருவேல மரங்களைத்தான் வெட்டுவேன். இங்கு நான் வெட்டிய மரங்களின் விறகுகளை மட்டும் நான் எடுத்துக் கொண்டு கிளம்புகிறேன். இனிமேல் இந்தப் பக்கம் வர மாட்டேன்” என்றான்.
அவன் சொல்வது உண்மை என்பதை உணர்ந்த இறைவன், அவனுக்கு உதவி செய்து, அவனுடைய வறுமையைப் போக்கலாம் என்று முடிவு செய்தார்.
சற்று தூரத்தில் கிடந்த, செங்கல் ஒன்றின் அளவில் இருந்த, கல் ஒன்றைக் காண்பித்து, அதை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார்.
அவனும் அப்படியேச் செய்தான்.
அவன் கொண்டு வந்த கல்லைத் தன் விரலால் இறைவன் தொட, சட்டென்று அது தங்கமாக மாறியது.
விறகுவெட்டி, அவரை இறைவன் என்று உணராமல், ஏதோ சித்து வேலைக்காரர் என்று நினைத்துக் கொண்டான்.
மேலும் கிடைத்த தங்கத்தைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளாமல், சிந்தனையில் ஆழ்ந்து விட்டான்.
“என்ன, மகிழ்ச்சிதானே? இதை வைத்து உன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள். போய் வா” என்றார்.
சட்டென்று அவன் சொன்னான், “அய்யா, இதை வைத்து என் கஷ்டங்கள் எதுவும் முழுமையாகத் தீராது”
புன்னகைத்த இறைவன், “அதைக் கீழே வைத்துவிட்டு, அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வா” என்று சற்று தூரத்தில் இருந்த பாறாங்கல்லைக் காண்பித்தார்.
அவனும், மகிழ்வுடன் ஓடிச் சென்று, அந்தப் பாறாங்கல்லைத் தூக்க முடியாமல், சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து அவர் முன்னே நின்றான்.
அவன் கொண்டு வந்த அந்தப் பாறாங்கல்லைத் தன் விரலால் இறைவன் தொட, சட்டென்று அதுவும் தங்கமாக மாறியது.
திகைத்துப்போன அவன் ஒரு கணம் யோசித்தான். மின்னலாக யோசித்தவன், அதைக் கீழே வைத்துவிட்டுச் சொன்னான்.
“அய்யா உங்களைப் போலவே எனக்கும் பத்து விரல்கள் இருக்கின்றன. நான் தொட்டால் அது தங்கமாக மாறும் சக்தியை, என்னுடைய ஒரு விரலுக்கு கொடுத்துவிடுங்கள். நான் வேண்டும் போது தொட்டு, வேண்டிய தங்கத்தை நானே பெற்றுக் கொள்கிறேன்”
புன்னகைத்த கடவுள், “இவன் பேராசை மிக்கவன், என்றைக்குமே பக்குவப்படமட்டான்” என்ற முடிவிற்கு வந்தார். சட்டென்று அந்த இடத்தைவிட்டு மறைந்தார்.
விறகு வெட்டி திகைத்துப் போனான். தங்கமாகமாறிய கற்கள் இரண்டும் மீண்டும் கற்களாக மாறித் தரையில் கிடந்தன. வந்தது இறைவனென்று உணர்ந்த விறகு வெட்டி கலங்கிப் போனான்.
கலங்கி என்ன பயன்? காலம்கடந்த கலக்கம். அவன் வாழ்க்கை முழுவதும் விறகு வெட்டிப் பிழைப்பதிலேயே கரைந்தது.
ஆசை இருக்கலாம். ஆனால் பேராசை இருக்கக் கூடாது!