கலீஃபா ஹஸரத் உமர்(ரலி) அவர்கள் வழக்கம் போல் ஒரு நாள் இரவு தமது தோழரோடு நகர்வலம் வந்து கொண்டிருந்தார்.
பக்கத்தில் ஒரு குடிசையில் குழந்தைகளின் அழு குரல் கேட்டது.
கலீஃபா அவர்கள் குடிசைக்குள் சென்று பார்த்தார்.
அங்கு ஒரு பெண் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எதையோ வேக வைத்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் உணவு கேட்டு அழுது கொண்டிருந்தார்கள்.
கலீஃபா அப்பெண்ணை விசாரித்தார்.
அவள் ஒரு விதவையென்றும், குழந்தைகள் பசி தாங்காது அழுகிறார்கள் என்றும், வெறும் தண்னீரை அடுப்பில் வைத்து உணவு தயாராகிக் கொண்டிருக்கிறது என அவர்களைப் பொய் சொல்லி சமாதானப்படுத்துவதாகவும் சொன்னாள்.
அவள் சொன்னதைக் கேட்டுக் கலீஃபா வருத்தமடைந்தார்.
தனது ஆட்சியில் இப்படியொரு அவல நிலையா? என நினைத்த அவர், அவசரமாகத் தனது இல்லத்திற்கு வந்து கோதுமை மாவு மற்றும் சில உணவுப் பொருள்களைத் தானேத் தனது தோளில் சுமந்து கொண்டு, அப்பெண்ணின் வீடு நோக்கிச் சென்றார்.
வழியில், அவரது தோழர் உணவுப் பொதிகளைத் தான் சுமப்பதாகக் கூறினார்.
ஆனால், கலீஃபா, “மறுமையில் எனது பாவச்சுமைகளை நீ சுமப்பாயா?” எனக் கூறி மறுத்து, தானே அதைச் சுமந்து சென்று தானே அந்தப் பெண்ணிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.
அதன் பிறகு, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு மாதந்தோறும், அரசக் களஞ்சியத்திலிருந்து அப்பெண்ணுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கவும் உத்தரவிட்டார்.
அதனால், இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள், கலீஃபாவை “மூட்டை சுமந்த முடிமன்னர்” எனப் போற்றியிருக்கின்றனர்.