ஒரு அரசன் வேட்டைக்காகத் தன் படை சூழக் காட்டுக்குச் சென்றான்.
தூரத்தில் சென்ற ஒரு மானைக் கண்டு துரத்திக் கொண்டு சென்ற அவன், தன் படையிடம் இருந்து பாதை மாறி காட்டில் சிக்கிக் கொண்டான்.
மானும் சிக்காமல், வந்த வழியும் நினைவில்லாமல் தவித்த அரசன், தூரத்தில் ஒரு குடில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியோடு அங்கு சென்றான்.
அந்தக் குடில் ஒரு முனிவரின் ஆசிரமம்.
குடிலில் இருந்து வெளிவந்த முனிவர், அரசனைக் கண்டு உள்ளே வரவேற்றார்.
தன் நிலையை விளக்கிய அரசன், தமது ஊருக்கு எப்படித் திரும்புவது என முனிவரிடம் கேட்டான்.
முனிவர் தம் சீடன் ஒருவனை மன்னனைத் தேடும் படைகளை இங்கே அழைத்து வரும்படி அனுப்பினார்.
அரசன் அப்போதுதான் குடிலின் பின்னால் உள்ள தோட்டத்தைக் கவனித்தான்.
முனிவரிடம் அனுமதி பெற்று, தோட்டத்திற்குச் சென்றான் அரசன்.
முனிவரும் பின் தொடர்ந்தார்.
பலவகைப் பூச்செடிகளும், கனி தரும் மரங்களும் நிறைந்திருந்த தோட்டத்தில் பூக்களில் தேனுண்ண வந்த வண்டுகளின் ரீங்காரமும், கனி உண்ண வந்த பறவைகளின் கொஞ்சல் கானங்களும் கேட்டு மனமகிழ்ந்த மன்னன், அடர்ந்த காட்டின் வனப்பை ஒரு தோட்டத்தில் உருவாக்கிய முனிவரின் கலைத்திறனை வியந்தான்.
அரசன், முனிவரிடம் இந்தத் தோட்டக்கலையைப் பயின்று, தன் அரண்மனையில் இதே போன்றதொரு தோட்டம் அமைக்க எண்ணினான்.
முனிவரும் அவனுக்குப் பலவகைத் தாவரங்களைப் பற்றி விளக்கிக் கூறி, பல செடிகளின் விதைகள், பதியன் தண்டு, வேர் முதலியவற்றைத் தந்தார்.
சீடன் படையுடன் திரும்பி வர, அரசன் முனிவரிடம் விடைபெற்று அரண்மனைக்குச் சென்றான்.
தான் கொணர்ந்த அனைத்துச் செடிகளையும் முனிவர் கூறியது போல் செய்து, ஒரு தோட்டத்தை உருவாக்கினான்.
தனது தோட்டத்தைப் பார்வையிட வரும்படி அரசன் முனிவருக்கு அழைப்பு விடுத்தான்.
முனிவரும் வருவதாகத் தெரிவித்துத் தகவல் அனுப்பினார்.
முனிவர் வரும் நாளுக்கு முதல் நாள், அரசன் தோட்டத்திற்குச் சென்றான்.
பூத்துக் குலுங்கிய மலர்களின் வாசம், கனிகளின் சுகந்தம் காற்றில் கரைந்து, கலந்து சுக அனுபவம் தந்த வேளையில், கீழேத் தரையில் கிடந்த இலைச்சருகுகளைக் கண்டான்.
முனிவர் வந்து காணும் வேளையில் தோட்டம் இவ்விதம் அலங்கோலமாய் இருப்பதா என எண்ணி, பணியாட்கள் கொண்டு தோட்டத்தைச் சுத்தம் செய்தான்.
அடுத்த நாள். முனிவர் தோட்டத்தைக் காண வந்திருந்தார்.
தோட்டத்தில் நுழைந்த முனிவரின் முகத்தில் இருந்த ஒளி மறைந்து சோகமானது.
முனிவரின் முக மாற்றம் கண்டு ஏமாற்றம் அடைந்த மன்னன், "ஏதேனும் குறையா... முனிவரே?" என்றான்.
முனிவர் அரசனிடம்,
"உன் தோட்டத்தில் தேனீக்களின் இசை இருக்கிறது. பறவைகளின் பாடல் இருக்கிறது. ஆனால், சருகுகளின் நடனத்தைக் காணோமே...?” என்றார்.