அங்கே இனவாத ஆட்சி நடந்து வந்தது.
மூஸா நபி இஸ்ரேவேல் இனத்தைச் சேர்ந்தவர். எகிப்தியர் ‘கிப்தி’ இனத்தவராவார்.
ஒருநாள் இரவு இளைஞர் மூஸா வெளியில் வந்தார். இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
ஒருவர் அவரது இனத்தவர், அடுத்தவர் கிப்தி இனத்தவர்.
மூஸா நபியின் இனத்தவன் மூஸா நபியிடம் உதவி கேட்டான்.
மூஸா நபியும் அவனுக்கு ஒரு குத்து விட்டார். ஒரே ஒரு குத்துதான். அவன் செத்து விழுந்தான். அப்படி நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
அது தற்செயலாக நடந்தது. திட்டமிட்ட கொலை அல்ல. கொன்னவர் யார் எனத் தெரிந்தால் மூஸா நபியைக் கொன்று விடுவார்கள்.
எனவே அதை ரகசியமாக வைத்திருக்கும் திட்டத்தில் களைந்தனர்.
அடுத்த நாள் கொலை பற்றி ஊரில் என்ன பேசப்படுகின்றது என்பதை அறிவதற்காக வெளியில் வந்தார்.
நேற்று சண்டை பிடித்துக் கொண்டிருந்த அந்த நபர் இன்னொருவருடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தான்.
மூஸா நபியைக் கண்டதும் நேற்றுப் போல் இன்றும் உதவி கேட்டான்.
அதனால் கோபமுற்ற மூஸா நபி, “உனக்கு இதுதானா வேலை? நீ குழப்பக்காரனாக இருக்கிறாயே” என இஸ்ரவேலைப் பார்த்துத் திட்டிக் கொண்டே மற்ற இனத்தவரைப் பிடிப்பதற்காகச் சென்றார்.
மூஸா நபி தன்னை அடிக்கப் போவதாக எண்ணிய இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்தவன், “நேற்று அவனைக் கொன்றது போல், இன்று என்னைக் கொல்லப் பார்க்கின்றாயா? நீ சமாதானம் செய்பவன் அல்ல. நீதான் குழப்பக்காரன்” என்று கூறினான்.
அதனால் நேற்று நடந்த கொலையின் சூத்திரதாரி மூஸா நபிதான் என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்து விட்டது.
செய்தி பிர்அவ்னின் சபைக்குத் தெரிந்து விட்டது.
மூஸா நபி பிர்அவ்னின் குடும்பத்துடன் தொடர்புடையவர் என்றாலும் இனவாத அரசில் இனவாதம் தானே முக்கியமானது. மூஸா நபியைக் கொல்வது என அவர்கள் முடிவு செய்து விட்டனர்.
மூஸா நபி மீது பாசம் கொண்ட ஒருவர் மூஸா நபியிடம் ஓடோடி வந்து, “பிர்அவ்னின் அரச சபையினர் உன்னைக் கொலை செய்ய முடிவு செய்து விட்டனர். எனவே ஊரில் இருக்காமல் எங்காவது ஓடிப்போய் விடு! உன் நன்மைக்குத்தான் நான் இதைச் சொல்கிறேன்” என்று கூறினார்.
உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொண்ட மூஸா நபி, தனது உறவுகளையும், ஊரையும் விட்டுவிட்டு, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினார். எகிப்தின் எல்லைதாண்டி மதியன் நகர் வரை ஓடினார்.
இனவாதம் கூடாது! உதவினாலும் கெட்டவனுக்கு உதவக் கூடாது என்பதை இந்தக்கதை உணர்த்துகிறது.
இக்கதை நிகழ்வு குர்ஆனில் 28:15 & 22 வரையுள்ள வசனங்களில் இடம் பெற்றுள்ளது.