ஒரு ராஜா அழகான குதிரை ஒன்று வளர்த்து வந்தார்.
அந்தக் குதிரைக்கு தான் இன்னும் அழகாக வேண்டும் என்கிற ஆசை வந்து கடவுளிடம் வேண்டியது.
கடவுள் குதிரையின் முன் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்றார்.
குதிரை நான் இன்னும் அழகாக வேண்டும்... அதனால், என் கழுத்தை நீளமாகவும், கால்களை நீளமாகவும் படைக்க வேண்டும் என்று கேட்டது.
கடவுளும் குதிரை கேட்ட மாதிரி கழுத்தையும், கால்களையும் நீளமாக படைத்தார்.
குதிரை இப்போது ஒட்டகம் மாதிரி ஆகிவிட்டது.
தன் உருவத்தை பார்த்த குதிரைக்கு அழுகை வந்து விட்டது.
“அய்யோ கடவுளே! என்னைப் பழைய மாதிரியே மாற்றிவிடுங்கள்” என்று கேட்டது அந்தக் குதிரை.
“நீ விரும்பிய மாதிரிதானே உன்னைப் படைத்துள்ளேன், பிறகு ஏன் வருத்தப்படுகிறாய்?” என்று கேட்டார் கடவுள்.
பின்னர் அவரேத் தொடர்ந்து, “ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் படைத்துள்ளேன். உன்னால் தரையில் வேகமாக ஓட முடியும், ஒட்டகத்தால் பாலைவனத்தில் விரைவாக ஓடமுடியும், அதிகமாகப் பொதி சுமக்க முடியும். அழகு வேண்டும் என்று மேலும் மேலும் ஏதாவது செய்ய நினைத்தால் இப்படித்தான் போய் முடியும்” என்றார்.
அழகு என்பது உருவத்தில் அல்ல, நீ செய்யும் செயலில்தான் இருக்கிறதை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.